Friday, 19 September 2014

ஜப்பான் கொண்டாடும் ஸ்ரீதேவி



’ஈராஸ் இன்டர்நேஷனல்’ தயாரிப்பில் பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி கதாநாயகியாக நடித்து பாலிவுட்டில் வெளிவந்தது ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ திரைப்படம். பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த படம், ஜூன் மாதம் ஜப்பானில் வெளியிடப்பட்டது.
யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு ஜப்பானில் ஹிட்டாகிய இந்த படம், இதுவரை 1 மில்லியன் டாலர்களை வசூலாக வாரிக் குவித்துள்ளது.
முதலில் 33 திரைகளில் காட்சியிடப்பட்ட இந்த படம், ஜப்பான் ரசிகர்களிடம் பெருவாரியான வரவேற்பைப் பெற்றதால், கூடுதலாக இன்னும் 17 திரைகளில் காட்சியிடப்பட்டது. மொத்தமாக ஜப்பானில் மட்டும் 20 வெவ்வேறு இடங்களில் 50 திரைகளில் ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படம் திரையிடப்பட்டது. இந்த படத்தின் ‘பிரிமியர் ஷோ’ மே மாதம் டோக்கியோவில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நடிகை ஸ்ரீதேவி, “படத்திற்கு அனைவரும் தரும் வரவேற்பும், அன்பும் எனக்கு பெருமகிழ்ச்சி தருகிறது. இது போன்ற அழகான படத்தை இயக்கியதற்கு கௌரி ஷிண்டேவிற்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும்” என்றார்.
இதற்கு முன் ஜப்பானில், ரஜினி நடித்த ’முத்து’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், ரஜினிக்கு அங்கு தீவிர ரசிகர்களையும் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.

‘மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்’இந்தி படத்துக்கு தடை: ரஜினி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு


நடிகர் ரஜினிகாந்த் | கோப்புப் படம்
‘மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற திரைப்படத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
“இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளேன். திரைப்படத் துறையில் எனது பங்களிப்புக்காக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் பெரும் மதிப்பைப் பெற்றுள்ளேன். என்னுடை நடிப்புத் திறமை, எனது தனி ஸ்டைல் போன்ற பல காரணங்களால் நான் ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றுள்ளேன். கடந்த பல ஆண்டுகளாக இந்திய சினிமாத் துறையில் புகழ்பெற்ற நடிகராக திகழ்கிறேன்.
இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த வர்ஷா புரொடக் ஷன்ஸ் என்ற நிறுவனம் மெய்ன் ஹூன் ரஜினிகாந்த் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளது. எனினும் எனது பெயரைப் பயன்படுத்த எவ்வித முன் அனுமதியும் பெறவில்லை. இந்தப் படத்தால் எனது புகழும், நற்பெயரும் பாதிக்கப்படும் என்பதால் எனது பெயரையோ, எனது படங்களையோ பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் ரஜினிகாந்த் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதி எஸ்.தமிழ்வாணன் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மெய்ன் ஹூன் ரஜினிகாந்த் படத்தின் சில காட்சிகள் நீதிமன்றத்தில் திரையிட்டு காட்டப்பட்டன. மேலும் ரஜினிகாந்த் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “கடந்த 1975-ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்கத் தொடங்கிய ரஜினிகாந்த் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவரது மிகச் சிறந்த நடிப்பால் அவர் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படுகிறார்.
இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த வர்ஷா புரடொக்சன்ஸ் என்ற நிறுவனத்தினர் ரஜினிகாந்த் பெயரை தவறாகப் பயன்படுத்தி மெய்ன் ஹூன் ரஜினிகாந்த் என்ற பெயரில் படம் தயாரித்துள்ளனர். இந்த படத்தில் பல மோசமான காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்தப் படம் வெளியானால் அதனால் ரசிகர்கள் மத்தியில் மனுதாரர் ரஜினிகாந்தின் புகழும், பெருமையும் பாதிக்கப்படும்” என்று வாதிட்டார்.
இதனையடுத்து நீதிபதி தமிழ்வாணன் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
“படத்தின் சில காட்சிகளைப் பார்த்ததில் இருந்தும், மனுதாரர் தரப்பு வழக்கறிஞரின் வாதத்திலிருந்தும் மெய்ன் ஹூன் ரஜினிகாந்த் படத்தால் மனுதாரருக்கு பாதிப்பு ஏற்படும் என்பது தெரிகிறது. ஆகவே, இந்த மனு தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
வழக்கின் விசாரணை செப்டம்பர் 25-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அதுவரை மெய்ன் ஹூன் ரஜினிகாந்த் படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது” என்று நீதிபதி கூறியுள்ளார்.

சினிமா » பாலிவுட் சென்னை Published: September 8, 2014 13:03 IST Updated: September 8, 2014 13:04 IST ‘மேரி கோம்’ திரைப்படம் 2 நாள் வசூல் ரூ.17.25 கோடி



பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்த ‘மேரி கோம்’ திரைப்படம் வெளியான முதல் 2 நாள் வசூல் 17.25 கோடியை கடந்துள்ளது. நாயகியை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களில் தனி கவனத்தை பெற்று அதிக வசூல் செய்த இந்திப்படம் ‘மேரி கோம்’ என்று இந்தப் படத்தின் தயாரிப்பு தரப்பில் கூறியுள்ளனர்.
உலக அளவில் குத்துச்சண்டை போட்டி யில் கவனம் பெற்ற மேரி கோமின் வாழக்கையை சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட படம் இது. இந்தப்படத்தில் மேரி கோம் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை பிரியங்கா சோப்ரா மிகவும் கடினமாக உழைத்தார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம் சமீபத்தில் டொரண்டோ திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தத் திரைப்படம் முதல் நாளில் 7.5 கோடியும். இரண்டாவது நாளில் 9.75 கோடியும் கடந்து வசூல் பெற்றது என்று கூறப்படுகிறது. வியாகாம் 18 மோஷன் பிக்சர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தினை ஓமங் குமார் இயக்கியுள்ளார்.

திரை விமர்சனம்: மேரி கோம் (இந்தி)



குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் வாழ்க்கை வரலாறை பாலிவுட்டுக்கு கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் ஓமங் குமார். விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்கள் பாலிவுட்டுக்கு புதிதல்ல. ஏற்கனவே மில்கா சிங்கின் வாழ்க்கை பாலிவுட்டில் படமாகியுள்ளது. இப்போது மேரி கோம்.
மணிப்பூரின் ஏழை விவசாயின் மகளான மேரி கோம் (பிரியங்கா சோப்ரா) எப்படி ஐந்து முறை உலக சாம்பியனாக உருவானார் என்பதைப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
பள்ளிப் பருவத்திலிருந்தே குத்துச்சண்டையில் அதீத ஆர்வம். ஆனால், மேரி கோமின் அப்பா (ராபின் தாஸ்) அவரைத் தடகள விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தச் சொல்கிறார். அப்பாவின் எதிர்ப்பையும் மீறிக் குத்துச்சண்டை பயிற்சி வகுப்புக்கு செல்கிறார் மேரி கோம். பயிற்சியாளர் நர்ஜித் சிங் (சுனில் தாபா) எடுத்தவுடனே குத்துச்சண்டை கற்றுக்கொடுக்காமல் மேரிக்குக் குத்துச்சண்டை மீதிருக்கும் பேரார்வத்தை உறுதிசெய்த பிறகே விளையாட்டைக் கற்றுக்கொடுக்கிறார். மேரி கோம் குத்துச்சண்டைப் போட்டிகளில் தொடர்ந்து பெறும் வெற்றிகளால் உலக சாம்பியன் அளவுக்கு உயர்கிறார்.
ஆனால், மேரி கோம் தன் நண்பனான ஆன்லரை (தர்ஷன் குமார்) காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பிறகு எல்லாமே மாறிவிடுகிறது. பயிற்சியாளர் நர்ஜித் சிங், திருமணத்துக்குப் பிறகு பயிற்சி அளிக்க மறுத்துவிடுகிறார். மேரி கோம் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகு விளையாட்டு உலகம் அவரைக் கிட்டத்தட்ட மறந்தே விடுகிறது. மேரி கோம் எப்படி போராடிக் குத்துச்சண்டையில் மீண்டும் உலக சாம்பியன் ஆகிறார் என்பதை பாலிவுட்டின் எந்த அம்சத்தையும் விட்டுக்கொடுக்காமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஓமங் குமார்.
சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சாய்வின் குவத்ராஸ் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். பாலிவுட்டின் மெலோடிராமாவுக்கு மேரி கோமும் தப்பிக்கவில்லை என்பதை சாய்வின் குவத்ராஸ் தன் திரைக்கதை மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆஸ்கார் விருது வாங்கிய 'மில்லியன் டாலர் பேபி' படத்தில் வரும் காட்சிகளின் தாக்கத்தை மேரி கோமின் குத்துச் சண்டைக் காட்சிகளில் பார்க்கலாம்.
மேரி கோமின் வாழ்க்கையைச் சுவாரஸ்யமான திரைக்கதையில் தந்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம். ஆனால் அவரது வாழ்க்கையின் போராட்டத்தை அதற்கான அழுத்தத்துடன் முழுமையாகத் திரையில் கொண்டுவரத் தவறியிருக்கிறார் இயக்குநர். வடகிழக்கு மாநிலங்களின் பிரச்சினை, விளையாட்டில் இருந்து அனைத்துத் துறைகளிலும் அம்மாநில மக்கள் சந்திக்கும் பிரச்சினை என அனைத்தையும் மேரி கோமும் தன் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறார். ஆனால், இத்திரைப்படம் அதை மேலோட்டமாக ஒரு சில காட்சிகளில் மட்டுமே பதிவுசெய்திருப்பதில் நிஜத்தின் கனம் தவறவிடப்பட்டிருக்கிறது.
இந்தியப் பெண்களுக்கு மேரி கோம் ஒரு சிறந்த முன்னுதாரணம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தியாவில் ஒரு பெண் குடும்ப வாழ்க்கை, பணி வாழ்க்கை என இரண்டையும் நிர்வகிப்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பதைப் பதிவுசெய்வதில் இப்படம் வெற்றியடைந்திருக்கிறது. மேரி கோமின் கணவர் ஆன்லர் மாதிரியெல்லாம்கூட ஆண்கள் இந்தியாவில் இருக்கிறார்களா என்ற ஆச்சரியத்தை ஆன்லரின் கதாபாத்திரச் சித்தரிப்பு ஏற்படுத்துகிறது.
மேரி கோமின் வாழ்க்கைக்குத் திரையில் உயிர் கொடுக்க வேண்டுமென்று பிரியங்கா எடுத்திருக்கும் கடுமையான முயற்சிகளை நிச்சயம் பாராட்ட வேண்டும். மேரி கோம் கதாபாத்திரத்துக்கு இயக்குநர் நியாயம் செய்யாவிட்டாலும் பிரியங்கா அதைத் தன் நடிப்பு மூலம் நியாயம் செய்துவிடுகிறார். சுனில் தாபா, தர்ஷன் குமார் என முக்கியக் கதாபாத்திரங்கள் தேர்வும் படத்துக்கு வலுசேர்க்கிறது.
மேரி கோம் திரைப்படத்தைக் கட்டாயம் மேரி கோமுக்காகவும் பிரியங்காவுக்காகவும் பார்க்கலாம்.

ட்விட்டரில் டிரெண்டான 'படுகோப' தீபிகா


தீபிகா படுகோனே| கோப்புப் படம்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, லோ-கட் உடையில் இருக்கும் புகைப்படத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரு ஆங்கில நாளிதழ், "தீபிகா அவரது மார்பு வளைவுகள் தெரியும் வகையில் உடையணிந்திருப்பதைக் காணலாம்" என பதிவையும் பகிர்ந்திருந்தது.
இந்த பகிர்வால் படுகோபமடைந்த தீபிகா படுகோனே, தனது ட்விட்டர் பக்கத்தில் சம்பந்தப்பட்ட அந்த நாளிதழுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.
அவரது ட்விட்டர் பக்கத்தில், "ஆமாம். நான் ஒரு பெண். எனக்கு மார்பகங்களும், வளைவுகளும் உள்ளன. அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?" என கொதித்தெழுந்திருந்தார் தீபிகா.
ட்விட்டரில் தீபிகாவை பின் தொடரும் லட்சக்கணக்கான அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்துகளை பதிவு செய்தனர். சம்பந்தப்பட்ட நாளிதழையும் தீபிகா ரசிகர்கள் வசை பாடியிருந்தனர். தீபிகா ட்வீட் செய்த 60 நிமிடங்களில் 1550 பேர் அதை ரீட்வீட் செய்தனர். சிறிது நேரத்தில் #As I-stand-with-Deepika ட்விட்டரில் டிரண்டானது. பாலிவுட் இயக்குநர்கள், நடிகர், நடிகைகளும் தீபிகாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். தீபிகா, தனக்கு முதுகெலும்பும் இருக்கிறது என நிரூபித்துவிட்டார் என பாராட்டியுள்ளனர்.

படம்: கோப்பு படம்: கோப்பு 'இன்டர்போல்' தூதரானார் நடிகர் ஷாரூக் கான்!


படம்: கோப்பு
பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக் கான், இன்டர் போலின் (சர்வதேச காவல் துறை) விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், நடிகர் ஜாக்கி சான் உடன் சக தூதராக ஷாரூக் சேர்ந்துள்ளார்.
இன்டர்போலின் 'டர்ன் பேக் கிரைம்' (Turn Back Crime) என்ற விழிப்புணர்வு பிரச்சாத்திற்கு ஷாரூக் தூதாரகியுள்ளார். குற்றங்களைத் தடுப்பதில் எப்படி ஒவ்வொருவரும் பங்காற்ற முடியும் என்பதை வலியுறுத்தும் பிரச்சாரமே இது.
ஒரு சர்வதேச பிரச்சாரத்திற்கு தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் முதல் இந்தியர் ஷாரூக் கான் என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி பேசிய ஷாரூக், "இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருப்பதை சிறந்த கவுரவமாக கருதுகிறேன்" என்றார்.
மேலும், " எத்தகைய குற்றமாக இருந்தாலும், மனிதர்களுக்கு எதிராக குற்றம் இழைப்பவர்களை நாம் அனைவரும் ஒன்றாக எதிர்த்துப் போராட வேண்டும்" என ஷாரூக் வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் பிரச்சாரத்திற்கு தூதராக ஷாரூக் நியமிக்கப்பட்டதைப் பற்றிப் பேசிய இன்டர்போலின் தலைவர் ரொனால்ட் கே நோபல், "ஷாரூக்குடன் இணைந்திருப்பதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம். மக்களை சினிமா மூலம் மகிழ்வித்துவரும் ஷாரூக், எப்படி தனது கலைத் திறனை இந்த பிரச்சாரத்திற்காக பயன்படுத்துவார் என்பதைக் காண ஆவலாக இருக்கிறோம்" என்றார்.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு, ஏற்கெனவே, சர்வதேச விளையாட்டு வீரர்களான லயனல் மெஸ்ஸி, ஃபெர்னாண்டோ அலொன்ஸோ, கிமி ரெக்கனன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனிருத் நெகிழ்ச்சி... சமந்தா கலாய்ப்பு... - 'கத்தி' இசை வெளியீடு ஹைலைட்ஸ்!


'கத்தி' இசை வெளியீட்டு விழா'கத்தி' இசை வெளியீட்டு விழா
விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ், சதீஷ் உள்ளிட்ட நடிக்க, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி இருக்கும் படம் 'கத்தி'. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
மாலை 4:30 மணிக்கு 'கத்தி' படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் பலத்த போலீஸ் பாதுக்காப்பிற்கு இடையே இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே, உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள்.
'கத்தி' இசை வெளியீட்டு விழாவின் சில துளிகள்:
* சிறப்பு விருந்தினர் என்று யாருமில்லாமல், படக்குழுவினரே படத்தின் இசை வெளியிட்டார்கள். இவர்களோடு படத்தின் இசையினை வாங்கியிருக்கும் ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் செளந்தர்யா ரஜினிகாந்த் இணைந்துக் கொண்டார்.
* இயக்குநர் தரணி, விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குநர் சிம்புதேவன், இயக்குநர் விஜய், அமலா பால், இயக்குநர் வசந்தபாலன், ஆர்யா, சிபிராஜ், சாந்தனு உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
* இசை வெளியீட்டு விழாவின் தொடக்கமாக 'பக்கம் வந்து' என்ற பாடலை ஹிப் ஹாப் ஆதி பாடினார். அதற்கு விளக்குகள் பொருத்தப்பட்ட ஆடையுடன் நடனமாடினார்கள். விளக்குகள் முழுவதும் அணைக்கப்பட்டு, நடனமாடியது பார்வையாளர்களுக்கு புதுமையாக இருந்தது.
* Lets take a Selfie pulla என்று விஜய் பாடிய பாடலுக்கு அவர் முன்னிலையில் நடனக் கலைஞர்கள் நடனமாடியது கண்டு ரசித்தார் விஜய்.
* "க்ரீன் பார்க் ஒட்டலில் ஏ.ஆர்.முருகதாஸைச் சந்தித்து, இப்படம் குறித்து பேசியது மறக்க முடியாத ஒன்று. நான் 6-வது படமே விஜய் படத்திற்கு இசையமைப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த மேடையில் ரொம்ப உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறேன். ஒவ்வொரு பாடலுமே, விஜய் மற்றும் அவரது ரசிகர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டவைதான். விஜய்யை போன்று ஒரு சிறந்த மனிதரை நான் இதுவரை கண்டதில்லை" என்று படத்தின் இசையமைப்பாளர் அனிருத் நெகிழ்ச்சியாக பேசினார்.
* 'கத்தி' டீஸரை இரண்டு முறை திரையிட்டார்கள். ஆயினும், விழாவிற்கு வந்திருந்த விஜய் ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை திரையிட வேண்டும் என்று ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தார்கள்.
* "இப்படத்தின் எனது நடிப்பிற்கும், வசன உச்சரிப்பிற்கும் விஜய் நிறைய உதவிகள் செய்தார். அவருடன் சண்டையிடும் காட்சிகளில் எல்லாம் நான் ஒரு நடிகனாகவே நடித்தேன். ஆகையால் அவரது ரசிகர்கள் என் மீது கோபப்பட்டு கொள்ள மாட்டார்கள்" என்று 'கத்தி' படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நீல் நிதின் முகேஷ் பேசினார்.
* "ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், ஹீரோ விஜய், அனிருத் இசை, நான் விஜய்யோடு படம் முழுவதும் ஒரு ரோல் எப்படியிருக்கும் என்று அனிருத்திடம் கூறியிருக்கிறேன். ஏ.ஆர்.முருகதாஸ் என்னிடம் படம் குறித்து பேசிவிட்டு, விஜய் தான் ஹீரோ என்றார். நான் உடனே அனிருத்திற்கு போன் செய்தேன். அவரது போன் பிஸியாக இருந்தது. திரும்ப அவர் போன் செய்தார்.
ப்ரோ.. விஜய் படம் கமிட்டாகி இருக்கேன் என்று கூற, நான் தான் இசை என்று அனிருத் கூறினார். நான் நினைத்தது நடந்திருக்கிறது. 'காதலுக்கு மரியாதை' படத்திற்காக போஸ்டர், பேனர் எல்லாம் ஒட்டியிருக்கிறேன். அவரோடு நடித்ததை எல்லாம் மறக்க முடியாத தருணங்கள். விஜய் அவரது ரசிகர்களை எவ்வளவு நேசிக்கிறார் என்பது அவரோடு பணியாற்றும் போது தான் புரிந்தது. எனது வீட்டில், சமந்தா போன்று ஒரு பெண்ணைத் தான் எனக்கு மணப்பெண்ணாக பார்க்கிறார்கள்" என்று படத்தில் விஜய்யோடு நடித்திருக்கும் சதீஷ் கூறினார்.
* "ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் துப்பாக்கி படம் சூப்பர் ஹிட் ஆனது. அதேபோல் இவர்கள் கூட்டணியில் கத்தி படம் உருவாக இருப்பதாக தகவல் தெரிந்ததும் இதில் விஜய் ஜோடியாக யார் என்று கடுமையான போட்டி நிலவி இருக்கும். அந்த சமயத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் எனக்கு போன் செய்து கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நீ தான் நடிக்க வேண்டும் என்று கூறியது. எனக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. உடனே விமானத்தில் பறந்து வந்தேன்.
கவலைப்படாதே சதீஷ்.. நானே உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று கலாய்ப்புடன் கூறினார் நாயகி சமந்தா. இவ்வாறு சமந்தா கூறியதும், அங்கிருந்த விளக்குகள் தாண்டி, சதீஷின் முகத்தில் அவ்வளவு உற்சாகம்.

மம்முட்டியின் சவாலை ஏற்ற சூர்யா


வீடியோவில் சூர்யா
நடிகர் மம்முட்டி விடுத்த 'மை ட்ரீ சேலஞ்ச்'-ஐ நடிகர் சூர்யா ஏற்றுள்ளார். இது தொடர்பான வீடியோவை சூர்யா பதிவேற்றியுள்ளார்.
கடந்த மாதம் இணையத்தில் பிரபலமான ஏ.எல்.எஸ் ஐஸ் பக்கெட் சவாலைப் போல, மலையாள நட்சத்திரம் மம்முட்டி, 'மை ட்ரீ சேலஞ்ச்' என்ற புதுவகையான சவால் ஒன்றை துவக்கினார். மரம் நட்டு நம் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சவாலை செய்ய, ஷாரூக் கான், விஜய், சூர்யா ஆகியோருக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
இம்மூவரில், தற்போது, தமிழ் நடிகர் சூர்யா, மம்முட்டியின் சவாலை ஏற்று, தன் பங்கிற்கு மரம் ஒன்றை நட்டுள்ளார். இது குறித்து வீடியோ பதிவில் பேசியுள்ள சூர்யா, ""மம்மூட்டி சார். உங்களுடைய MyTreeChallenge-யை சந்தோஷத்தோடு ஏற்கிறேன். அமீர்கான், சுதீப் மற்றும் என்னுடைய நண்பர் மகேஷ்பாபு ஆகியோருக்கு சவால் விடுக்கிறேன். அவர்களுடைய ரசிகர்கள் மற்றும் என்னுடைய ரசிகர்களையும் இந்த அற்புதமான நல்ல காரியத்தை செய்ய வேண்டும். நன்றி" என்று கூறியுள்ளார்.

நம் நாட்டில் முஸ்லிம்கள் இந்தியராகவே இருப்பர்: மோடி


பிரதமர் நரேந்திர மோடி | கோப்புப் படம்: ரமேஷ் சர்மா
இந்திய முஸ்லிம்கள் அல்-காய்தா தீவிரவாத இயக்கத்தினர் ஆட்டிவிக்கும்படியெல்லாம் ஆடமாட்டார்கள். அவர்கள் இந்தியராகவே இருப்பர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அண்மையில், இந்திய துணைக் கண்டத்தில் அல்-காய்தாவின் கிளை தொடங்கப்பட்டிருப்பதாக அந்த அமைப்பின் தலைவர் அய்மான் அல்- ஜவாஹிரி அறிவித்தார். ஏ.கியூ.ஐ.எஸ். (Al-Qaeda in the Indian Subcontinent) என்று பெயரிடப்பட்டுள்ள இந்திய கிளையை, பாகிஸ்தான் தலிபான் இயக்கத் தலைவர் ஆசிம் உமர் வழிநடத்துவார் என்றும் அல்-ஜவாஹிரி மிரட்டல் விடுத்திருந்தார்.
இதுதொடர்பாக 55 நிமிடங்கள் ஓடும் வீடியோவை அல்-காய்தாவின் ஊடகப் பிரிவான அஸ்-சஹாப் மீடியா வெளியிட்டிருந்தது.
பெரும் சர்ச்சையைக் கிளப்பிய இந்த வீடியோ குறித்து சி.என்.என். - ஐ.பி.என் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, இந்திய முஸ்லீம்கள் இந்தியரவாகவே வாழ்ந்து மறைவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
அந்தப் பேட்டியில் அவர் மேலும் கூறும்போது, "இந்திய முஸ்லிம்கள் அல்-காய்தா தீவிரவாத இயக்கத்தினர் ஆட்டிவிக்கும்படியெல்லாம் ஆடமாட்டார்கள். அவர்கள் இந்தியராகவே வாழ்ந்து, மறைவார்கள்.
அல்-காய்தா இயக்கத்தினர் இந்திய முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்து வருகின்றனர். எனவே, இந்திய முஸ்லிம்கள் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என அல்-காய்தாவினர் நினைத்தால் அது வெறும் காட்சிப்பிழையே. இந்திய முஸ்லிம்கள் தேசத்திற்கு எதிராக ஒருபோதும் செயல்பட மாட்டார்கள்" என்றார்.
இந்தியாவில் 170 மில்லியன் முஸ்லிம்கள் இருக்கின்றனர். ஆனாலும், அல்-காய்தா இயக்கத்தில் இணைந்தவர்கள் மிகக் குறைவு அல்லது இல்லவே இல்லை எனும் நிலையே இருக்கிறது. இந்திய முஸ்லிம்கள் அல்-காய்தா தாக்கத்துக்கு வசப்படாததற்கு காரணம் என்ன? என மோடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த மோடி, "உளவியல் ரீதியாகவோ, மத ரீதியாகவோ இவ்விவகாரத்தை பகுப்பாய்வு செய்ய முடியவில்லை. ஆனால், நம் முன் இருக்கும் சவால் மனிதம் பேணப்பட வேண்டுமா? வேண்டாமா என்பதே ஆகும். மனிதத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும். தீவிரவாதம் என்பது மனிதத்திற்கு எதிரானது. அது ஒரு நாட்டிற்கு, குறிப்பிட்ட ஓர் இனத்திற்கோ எதிரானது அல்ல. எனவே, தீவிரவாதத்திற்கு எதிரான போராகவே பார்க்க வேண்டும்" என கூறினார்.
Thursday, 18 September 2014

என் உடல்நிலையை நாடகமாக்க நினைத்தவர்களுக்கு வருத்தங்கள்: கமல்ஹாசன்


நடிகர் கமல்ஹாசன்நடிகர் கமல்ஹாசன்
தான் நலமாக இருப்பதாகவும், உணவு ஒவ்வாமை காரணமாகவே மருத்துவமனையில் உள்ளதாகவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
உணவு ஒவ்வாமை (ஃபுட் பாய்சன்) காரணமாக, நடிகர் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக அவருக்கு நரம்பு பிரச்சினை என்று தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து தொலைபேசி மூலம் பேசிய கமல்ஹாசன், "எனக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் இருக்கிறேன். வேறு ஒன்றும் இல்லை. இந்தச் செய்தியை வைத்து பெரிய நாடகம் நடத்த நினைத்தவர்களை ஏமாற்றியதற்காக வருந்துகிறேன்" என்றார்.
மேலும அவர் கூறும்போது, "கேரளாவின் உட்பகுதிகளில் படப்பிடிப்பில் இருந்தோம். அங்கு சரியான உணவகங்கள் இல்லை. அதனால், சாலையோர கடைகளில் சாப்பிட்டோம். அங்கே இருந்த தண்ணீரை குடித்தோம். அதன் விளைவாகதான் நான் மருத்துவமனையில் இருக்கிறேன். எனக்கு வெறும் உணவு ஒவ்வாமை மட்டுமே ஏற்பட்டுள்ளது" என்றார் நடிகர் கமல்ஹாசன்.
'த்ரிஷ்யம்' மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாபநாசம்' படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கேரளாவில் அண்மையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

பணத்திற்காக படம் இயக்கும் ஆள் நானில்லை: ஏ.ஆர்.முருகதாஸ் அதிரடி


இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் | கோப்பு படம்எப்போதுமே பணத்திற்காக படம் இயக்கும் ஆள் நானில்லை என்று 'கத்தி' இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.முருகதாஸ் பேசினார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'கத்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் செப்.18-ஆம் நடைபெற்றது. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தின் இசையை ஈராஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் இசை மூலமாக ஈராஸ் நிறுவனம், தமிழ் திரையுலகின் இசையுலகில் கால் பதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
'கத்தி' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியது, "'துப்பாக்கி' படம் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்த படம். அதற்கு பிறகு நாங்கள் இருவரும் சேரும் படம் என்பதால், நன்றாக வரவேண்டும் என்ற மன அழுத்தம் இருந்தது. ஆனால், அதை சந்தோஷமாக எடுத்துக் கொண்டேன்.
விஜய்யை வைத்து ஒரு வசனம் எழுதினால், அதை தனது நடிப்பு மூலம் ஒரு படி மேலே கொண்டுப் போய் விடுவார். 'துப்பாக்கி' இடைவெளி காட்சியில் நான் I AM WAITING என்று மட்டும் தான் எழுதினேன். அதை, தலையை கீழே இறக்கி ஏற்றி, I AM WAITING என்று சொன்ன விதம் தான், அந்த வசனத்தினை இன்று வரை பேசுகிறார்கள்.
கொஞ்ச நாட்களுக்கு முன்பு, நான் விஜய்யிடம் உங்களுக்கு 'துப்பாக்கி' ஜெகதீஷை பிடிக்குமா, 'கத்தி' ஜீவானந்தம் அல்லது கதிரேசனை பிடிக்குமா என்று கேட்டேன். அதற்கு விஜய், "எனக்கு 'துப்பாக்கி' ஜெகதீஷை விட கதிரேசனைத் தான் பிடிக்கும்" என்றார். அதில் இருந்தே தெரிந்துக் கொள்ளுங்கள், இந்தப் படம் எப்படி வந்திருக்கிறது என்று.
தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்ற நோக்கில், ஒரு புறம் படப்பிடிப்பு, இன்னொரு பக்கம் டப்பிங், இன்னொரு பக்கம் எடிட்டிங், கிராபிக்ஸ் பணிகள் என அதிகமான பணிகள் காரணமாக படப்பிடிப்பில் மயங்கி விழுந்து விட்டேன். எப்போதுமே ஆம்புலன்ஸ் போகக்கூடிய நிலைமை நமக்கு வரக்கூடாது என்று நினைத்தேன். அன்று ஆம்புலன்ஸில் போகும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. என்னுடம் விஜய் சாரும் ஆம்புலன்ஸில் வந்தார்.
மருத்துவமனையில் என்னைத் தட்டி மருத்துவர், "இவர் யார் என்று தெரிகிறதா?" என்று கேட்டார். நான் அவர் காட்டிய பக்கம் தலையை திருப்பினேன், அங்கு விஜய் நின்றுக் கொண்டிருந்தார். உடனே மருத்துவரிடம், "இவரை தெரியாது என்று கூறினால், என் மகனே என்னை அடிப்பான் சார்." என்று கூறினேன். என்னுடன் முழுக்க இருந்து கவனித்துக் கொண்டார்.
நான் பணத்துக்காக இந்தியில் படம் எடுக்கச் செல்லவில்லை. சென்னைக்கு அப்பால் உள்ள ஊரில் இருந்து வரும் ஒருவனால் இந்தியில் சாதிக்க முடியும் என்பதை காட்டுவதற்காக தான் படம் எடுக்கச் சென்றேன். இந்தி, தெலுங்கில் நான் படம் இயக்கினால் எனக்கு தமிழ் படம் இயக்குவதை விட சம்பளம் அதிகம். நானும் விஜய்யும் பணத்திற்காக படம் எடுக்கவில்லை. நானும் பச்சை தமிழன் தான். எனக்கும் தமிழ் உணர்வு இருக்கு." என்றார்.

ரஜினியை போற்றும் படைப்பே 'மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்': ஆதித்யா மேனன்


நடிகர் ஆதித்யா மேனன், நடிகர் ரஜினிகாந்த் | கோப்புப் படம்நடிகர் ஆதித்யா மேனன், நடிகர் ரஜினிகாந்த் | கோப்புப் படம்
'மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்' திரைப்படம் நடிகர் ரஜினியை போற்றும் விதமாகவே இருக்கும் என நடிகர் ஆதித்யா மேனன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கில் ‘மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற திரைப்படத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் உயர் நீதிமன்றத்தில் மனுவில், இந்தப் படத்தால் தனது புகழும், நற்பெயரும் பாதிக்கப்படும் என்பதால் தனது பெயரையோ, தனது படங்களையோ பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 25-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றும், அதுவரை மெய்ன் ஹூன் ரஜினிகாந்த் படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், 'மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்' படத்தில் நடித்துள்ள நடிகர் ஆதித்யா மேனன் கூறும்போது, "நடிகர் ரஜினிகாந்தை கவுரப்படுத்தும் விதமாகவே எங்கள் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அவரை தவறானவராக காண்பிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை.
எவருமே ரஜினியைத் தவறானவராக காண்பிக்க நினைக்க மாட்டார்கள், நாங்கள் மட்டும் எப்படி நினைக்க முடியும். இது ரசிகர்களை சிரிக்க வைக்கும் நகைச்சுவைத் திரைப்படமே. அவரது பெயரைத் தவிர அவரைப் பற்றி எதுவும் இந்த திரைப்படத்தில் இல்லை. மக்கள் இந்தப் படத்தைப் பார்க்கும்போது அதை புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. படம் எந்த வித தடங்கலும் இன்றி வெளியாகும் என நம்புகிறேன். பட வெளியீடு தேதி குறித்து இறுதி முடிவை இயக்குநரும், தயாரிப்பாளரும் தான் எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
'மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்' படத்தில் ஆதித்யா மேனன், ரஜினிகாந்த் ராவ் என்ற கூலிப்படை ஆளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஃபைசல் சைஃப் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை வர்ஷா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. ஆதித்யா மேனன், தமிழில் வில்லு, நான் ஈ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மா தடுத்ததால் ராணுவத்தில் சேர முடியவில்லை : அர்ஜுன் பேச்சு


இசை வெளியீட்டு விழாவில்..

இசை வெளியீட்டு விழாவில்..
ராணுவத்தில் சேருவதற்கான படிவத்தில் தனது அம்மா கையெழுத்திடாததால் தன்னால் ராணுவத்தில் சேர முடியவில்லை என்றார் நடிகர் அர்ஜுன்.
‘ஜெய்ஹிந்த் 2’ திரைப்படத்தின் இசை வெளீயீட்டு விழா சென்னை யில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா, கலைப்புலி எஸ்,தாணு, அர்ஜூன், மனோபாலா மற்றும் மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
படத்தின் இசைத்தட்டை இயக்குநர் பாலா வெளியிட மேஜர் முகுந்தின் மகள் ஆர்ஷியா மற்றும் படத்தில் நடித்துள்ள பேபி யுவினா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அர்ஜுன், “நான் சிறுவயதில் ராணுவ வீரனாக விரும்பினேன். ஆனால் அதற்குரிய படிவத்தில் என் அம்மா கையெழுத்து போடாத தால் ராணுவ வீரனாக முடிய வில்லை” என்றார்.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா பேசியதாவது:
இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு முகுந்த் வரத ராஜனின் குடும்பத்தினர் வருகிறார் கள் என்று கேள்விப்பட்டபோதே இதில் நிச்சயம் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன். அர்ஜுன் ராணுவத்தில் சேர அவரது வீட்டில் அனுமதிக்கவில்லை என்று கூறினார். அப்படி அவர் சேர்ந்தி ருந்தால் இந்தியாவின் நிஜ ஆக்‌ஷன் கிங்காக இருந்திருப்பார்.
இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் மட்டுமே இருப்பதாக கூறினார்கள். இதுமாதிரி படங்க ளுக்கு மூன்று பாடல்கள்தான் இருக்க வேண்டும். தேசப்பற்று என்கிற முக்கியமான கருத்தை சொல்லும்போது அதிக பாடல் களை வைத்தால் கேலிக் கூத்தாகி விடும். அப்படி ஒரு கமர்ஷியல் படம் எடுப்பதைவிட எடுக்காமல் இருப்பதே நல்லது.
சினிமா துறையினரோடு புகைப் படம் எடுத்துக்கொள்ளவோ, அதை பாதுகாத்து வைக்கவோ நான் ஆசைப்பட்டதில்லை இந்த மேடையில் முகுந்த் வரத ராஜன் குடும்பத்தினரோடு புகைப் படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படு கிறேன். இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சியில் மேஜர் முகுந்த னின் தந்தை வரதராஜன் பேசிய தாவது: அர்ஜூனின் ‘ஜென்டில் மேன்’ படத்தை பார்த்து என் மகன் முகுந்த் அவரின் ரசிகரானார். ‘ஜெய்ஹிந்த்’ படத்தை பல தடவை விரும்பி பார்த்திருக்கிறார். இங்கே ‘ஜெய்ஹிந்த் 2’ படத்தின் சில காட்சிகளை பார்த்தேன். இப்படி ஒரு தேசப்பற்றுள்ள படத்தை பார்க்க என் மகன் இன்று இல்லையே என்பதில் எனக்கு வருத்தம்தான். இந்த விழாவில் நாங்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டது மகிழ்ச்சி’’ என்றார்.

நான் தியாகியும் அல்ல; துரோகியும் அல்ல: விஜய் உருக்கமான பேச்சு


'கத்தி' இசை வெளியீட்டு விழாநான் தியாகியும் அல்ல; துரோகியும் அல்ல என்று 'கத்தி' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் உருக்கமாக பேசினார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'கத்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் செப்.18-ஆம் நடைபெற்றது. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தின் இசையை ஈராஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் இசை மூலமாக ஈராஸ் நிறுவனம், தமிழ் திரையுலகின் இசையுலகில் கால் பதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
'கத்தி' இசை வெளியீட்டு விழாவில் விஜய், "இன்றைய நாயகன் அனிருத் தான். மிக அற்புதமான இசையைக் கொடுத்திருக்கிறார். அதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கும், இயக்குநர் முருகதாஸுக்கும் மிக முக்கியமான படம் 'கத்தி'. ‘கத்தி’ படம் எடுத்தது சண்டை போடுவதற்காக அல்ல. எல்லா தரப்பு மக்களும் சண்டை சச்சரவுகளை மறந்து சந்தோஷமாக படத்தை ரசிக்க வேண்டும் என்பதற்காக தான்.
எந்த மக்களுக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ இந்த படத்தை எடுக்கவில்லை. என்னை நான் தியாகி என்று சொல்லிக் கொள்ள மாட்டேன். ஆனால் சத்தியமாக நான் துரோகி கிடையாது. தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்ய மாட்டேன். இது தமிழ்நாடு, நான் தமிழன்.
உண்மைக்கு விளக்கம் கொடுத்தால் அது தெளிவாகும். ஆனால், வதந்திக்கு விளக்கம் கொடுத்தால் அது உண்மையாகி விடும்." என்று கூறினார்.

தமிழ் சினிமா பிரம்மாண்டத்துக்கு அர்னால்டு கற்றுத் தந்த பாடம்


'ஐ' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் மற்றும் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தமிழ் திரையுலகின் பிரம்மாண்டத்திற்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டு குறிப்பிடத்தக்க பாடம் ஒன்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதுதான் 'காலம் தவறாமை'யின் அவசியம்.
ஹாலிவுட் நடிகர்களான ஜாக்கி சான் மற்றும் அர்னால்டு இருவருமே தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட படங்களின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடித்த 'தசாவதாரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார் ஜாக்கிசான்.
அந்த விழாவில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தி நடிகர் அமிதாப் பச்சன், கமல், மலையாள நடிகர் மம்மூட்டி, விஜய், மல்லிகா ஷெராவத் ஆகியரோடு ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான்கலந்து கொண்டார்.
'தசாவதாரம்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும்போது, கேசட் விளம்பரத்தைச் சுற்றிருந்த பேப்பரை கிழித்து அப்படியே கீழே போட்டு விட்டார்கள். யாருமே அதைக் கண்டு கொள்ளாமல் புகைப்படம் மற்றும் வீடியோவிற்கு போஸ் கொடுக்க ஆரம்பிக்க, ஜாக்கிசான் அந்தக் குப்பைகளைப் பொறுக்கி எடுத்து அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போடுவதற்கு நடந்து சென்றார். உடனே சுற்றிருந்த நடிகர்கள் சுதாரித்து அவரிடம் இருந்த பேப்பரை வாங்கி உதவியாளர் ஒருவரிடம் கொடுத்தனர்.
பிறகு, ஜாக்கிசான் இசை வெளியீட்டு விழாவிற்கு போஸ் கொடுத்து கொண்டு இருந்தாலும், குப்பைப் பேப்பரை வாங்கிச் சென்ற அந்த உதவியாளர் சரியாக குப்பைத் தொட்டியில் போடுகிறாரா என்பதைப் பார்த்து கொண்டே இருந்தார். 'தசாவதாரம்' இசை வெளியீட்டு விழாவில் இது மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டது.
'ஐ' இசை வெளியீட்டு விழா...
'ஐ' இசை வெளியீட்டு விழாவை பொறுத்தவரை, ஒரு விழா எந்தவித முன்னேற்பாடும் இன்றி நடைபெற்றால் எப்படியிருக்கும் என்பதற்கு ஓர் உதாரணமாக இருந்தது. பிற்பகல் 3:30 மணியில் இருந்து 5:30 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்று டிக்கெட்களில் போடப்பட்டு இருந்தது. ஆனால், நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது மணி 7:30-யைத் தாண்டிவிட்டது.
இசை வெளியீட்டு விழா ஆரம்பிக்கும் முன்பு இசைக்கு ஏற்றவாறு ஒளி அமைப்பு மாறுவது காண்பிக்கப்பட்டது. ரஜினியை அழைத்து வந்து உட்கார வைத்துவிட்டுச் சென்று விட்டார்கள். சில நிமிடங்கள் தனியாக உட்கார்ந்து கொண்டு இருந்தார். பிறகு ஷங்கர், புனித் ராஜ்குமார் கடைசியாக அர்னால்டு அழைத்து வரப்பட்டார்.
நிகழ்ச்சியை உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருந்த அர்னால்டு முன்பு பாடி பில்ட் ஷோ நடைபெற்றது. நிறைய பாடி பில்டர்கள் ஷங்கர் படங்களின் பாடல்களுக்கு ஏற்றவாறு பாடி பில்ட் நிகழ்ச்சியை அரங்கேற்றி, நேரடியாக அர்னால்டுக்கு மரியாதை செய்தார்கள். அப்போது, அவர்களோடு இணைந்து மேடையேறிய அர்னால்டு, தன்னுடைய பேச்சைத் தொடங்கினார்.
இதை கவனித்ததும், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகர் சிம்ஹா குறுக்கிட்டு, 'படத்தைப் பற்றிய பேச்சை அப்புறம் பேசலாம் சார்' என்று கூறவே, "நான் எப்போது என்ன பேச வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று தொடங்கி தனது பேச்சைத் தொடங்கி முடித்து அரங்கினை விட்டு வெளியேறினார்.
இசையை வெளியிடுவதற்கு முன்பே அர்னால்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது, விழா ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
'ஐ' படத்தின் இசை வெளியீடு விழா சிறப்பு விருந்தினர் இன்றி, ரஜினி இசையை வெளியிட புனித் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார். அந்த இசை வெளியீட்டின்போது கூட படத்தின் நாயகன் விக்ரமும், நாயகி ஏமி ஜாக்சனும் அங்கு இல்லை. 'ஐ' இசை வெளியீட்டு விழாவைக் காப்பாற்றியது என்னவோ ரஜினி மட்டுமே.
'தசாவதாரம்' இசை வெளியீட்டில் தூய்மையையும் எளிமையையும் கற்றுக் கொடுத்தார் ஜாக்கிசான், 'ஐ' இசை வெளியீட்டு விழாவில் 'காலம் தவறாமை'யை கற்றுக் கொடுத்திருக்கிறார் அர்னால்டு.
பிரம்மாண்டம் என்ற அடைமொழியுடன் அறங்கேற்றப்படும் தமிழ் சினிமாவின் இசை வெளியீட்டு விழாவில் எந்த ஒரு நிகழ்ச்சியும் சரியான நேரத்தில் ஆரம்பித்ததில்லை. இனியாவது விழித்துக்கொள்வார்களா?

ஐ-டியூன்ஸில் 'ஐ'-யை முந்தியது 'கத்தி': அனிருத்தின் 6-வது படமும் டாப்!


அனிருத் - விஜய்அனிருத் இசையில் வெளியாகியுள்ள 'கத்தி' திரைப்படத்தின் பாடல்கள், இந்திய அளவில் ஐ-டியூன்ஸ் தளத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன் அனிருத் இசையில் வெளிவந்த 5 திரைப்படங்களின் இசையும், வெளிவந்த நாளில் ஐ-டியூன்ஸில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
'3' திரைப்படம் மூலம் அறிமுகமான அனிருத், அத்திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் யூடியூபில் ஹிட் ஆனதால், உலகளவில் பிரபலமானார். தொடர்ந்து அவர் மீதிருந்து எதிர்பார்ப்பை எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, மான் கராத்தே, வேலையில்லா பட்டதாரி அகிய திரைப்படங்களின் பாடல்கள் மூலம் வெகுவாக பூர்த்தி செய்தார்.
அனிருத் ரசிகர்கள் பலரும் இன்று சமூக வலைதளங்களில் அவரை தொடர்ந்து வருகின்றனர். அவரது பாடல்களை சிலாகித்து பேசியும், பகிர்ந்தும் வருகின்றனர். விஜய் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் 'கத்தி' திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே பாடல்கள் குறித்து ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவியது.
சில நாட்களுக்கு முன், 'கத்தி' திரைப்படத்தில் இடம்பெறும் 'லெட்ஸ் டேக் ஏ செல்ஃபி புள்ள' பாடல் கள்ளத்தனமாக வெளியானது. இது படக்குழுவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் பாடல் ரசிகர்களிடயே வரவேற்பை பெற்றது.
இன்று கத்தி திரைப்படத்தின் பாடல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியான சில மணி நேரங்களிலேயே, பாடல்களை முறையாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள உலகளவில் பலர் பயன்படுத்து ஐ-டியூன்ஸ் இணையதளத்தில், கத்தி பாடல்கள், இந்திய அளவில் முதலிடத்தை பிடித்தன. சில நாட்களுக்கு முன் வெளியான ஏ.ஆர் ரகுமானின் 'ஐ' படப் பாடல்கள், இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
இதற்கு முன் அனிருத் இசையமைத்த 5 திரைப்பட பாடல்களுமே ஐ-டியூன்ஸ் தளத்தில், வெளியான அன்று முதலிடத்தை பிடித்தது. தொடர்ந்து ஆறாவது முறையாக முதலிடம் பிடித்தற்கு ரசிகர்களுக்கும், கத்தி வாய்ப்பிற்காக ஏ.ஆர். முருகதாஸுக்கும், நடிகர் விஜய்க்கும் தனது ட்விட்டர் பக்கத்தில், அனிருத் நன்றி தெரிவித்துள்ளார்.