
’ஈராஸ் இன்டர்நேஷனல்’ தயாரிப்பில் பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி
கதாநாயகியாக நடித்து பாலிவுட்டில் வெளிவந்தது ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’
திரைப்படம். பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த படம், ஜூன் மாதம்
ஜப்பானில் வெளியிடப்பட்டது.
யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு ஜப்பானில் ஹிட்டாகிய இந்த படம், இதுவரை 1 மில்லியன் டாலர்களை வசூலாக வாரிக் குவித்துள்ளது.
முதலில் 33 திரைகளில் காட்சியிடப்பட்ட இந்த படம், ஜப்பான் ரசிகர்களிடம்
பெருவாரியான வரவேற்பைப் பெற்றதால், கூடுதலாக இன்னும் 17 திரைகளில்
காட்சியிடப்பட்டது. மொத்தமாக ஜப்பானில் மட்டும் 20 வெவ்வேறு இடங்களில் 50
திரைகளில் ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படம் திரையிடப்பட்டது. இந்த படத்தின்
‘பிரிமியர் ஷோ’ மே மாதம் டோக்கியோவில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நடிகை ஸ்ரீதேவி, “படத்திற்கு அனைவரும் தரும் வரவேற்பும்,
அன்பும் எனக்கு பெருமகிழ்ச்சி தருகிறது. இது போன்ற அழகான படத்தை
இயக்கியதற்கு கௌரி ஷிண்டேவிற்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும்” என்றார்.
இதற்கு முன் ஜப்பானில், ரஜினி நடித்த ’முத்து’ திரைப்படம் மிகப்பெரிய
வரவேற்பைப் பெற்றதுடன், ரஜினிக்கு அங்கு தீவிர ரசிகர்களையும் பெற்றுத்
தந்தது குறிப்பிடத்தக்கது.