
இந்திய முஸ்லிம்கள் அல்-காய்தா தீவிரவாத இயக்கத்தினர்
ஆட்டிவிக்கும்படியெல்லாம் ஆடமாட்டார்கள். அவர்கள் இந்தியராகவே இருப்பர்
என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அண்மையில், இந்திய துணைக் கண்டத்தில் அல்-காய்தாவின் கிளை
தொடங்கப்பட்டிருப்பதாக அந்த அமைப்பின் தலைவர் அய்மான் அல்- ஜவாஹிரி
அறிவித்தார். ஏ.கியூ.ஐ.எஸ். (Al-Qaeda in the Indian Subcontinent) என்று
பெயரிடப்பட்டுள்ள இந்திய கிளையை, பாகிஸ்தான் தலிபான் இயக்கத் தலைவர் ஆசிம்
உமர் வழிநடத்துவார் என்றும் அல்-ஜவாஹிரி மிரட்டல் விடுத்திருந்தார்.
இதுதொடர்பாக 55 நிமிடங்கள் ஓடும் வீடியோவை அல்-காய்தாவின் ஊடகப் பிரிவான அஸ்-சஹாப் மீடியா வெளியிட்டிருந்தது.
பெரும் சர்ச்சையைக் கிளப்பிய இந்த வீடியோ குறித்து சி.என்.என். - ஐ.பி.என்
சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, இந்திய முஸ்லீம்கள் இந்தியரவாகவே
வாழ்ந்து மறைவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
அந்தப் பேட்டியில் அவர் மேலும் கூறும்போது, "இந்திய முஸ்லிம்கள் அல்-காய்தா
தீவிரவாத இயக்கத்தினர் ஆட்டிவிக்கும்படியெல்லாம் ஆடமாட்டார்கள். அவர்கள்
இந்தியராகவே வாழ்ந்து, மறைவார்கள்.
அல்-காய்தா இயக்கத்தினர் இந்திய முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்து
வருகின்றனர். எனவே, இந்திய முஸ்லிம்கள் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்
என அல்-காய்தாவினர் நினைத்தால் அது வெறும் காட்சிப்பிழையே. இந்திய
முஸ்லிம்கள் தேசத்திற்கு எதிராக ஒருபோதும் செயல்பட மாட்டார்கள்" என்றார்.
இந்தியாவில் 170 மில்லியன் முஸ்லிம்கள் இருக்கின்றனர். ஆனாலும், அல்-காய்தா
இயக்கத்தில் இணைந்தவர்கள் மிகக் குறைவு அல்லது இல்லவே இல்லை எனும் நிலையே
இருக்கிறது. இந்திய முஸ்லிம்கள் அல்-காய்தா தாக்கத்துக்கு வசப்படாததற்கு
காரணம் என்ன? என மோடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த மோடி, "உளவியல் ரீதியாகவோ, மத ரீதியாகவோ இவ்விவகாரத்தை
பகுப்பாய்வு செய்ய முடியவில்லை. ஆனால், நம் முன் இருக்கும் சவால் மனிதம்
பேணப்பட வேண்டுமா? வேண்டாமா என்பதே ஆகும். மனிதத்தை பாதுகாக்க அனைவரும்
ஒன்றுபட வேண்டும். தீவிரவாதம் என்பது மனிதத்திற்கு எதிரானது. அது ஒரு
நாட்டிற்கு, குறிப்பிட்ட ஓர் இனத்திற்கோ எதிரானது அல்ல. எனவே,
தீவிரவாதத்திற்கு எதிரான போராகவே பார்க்க வேண்டும்" என கூறினார்.
{ 0 comments... read them below or add one }
Post a Comment