‘மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்’இந்தி படத்துக்கு தடை: ரஜினி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு


நடிகர் ரஜினிகாந்த் | கோப்புப் படம்
‘மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற திரைப்படத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
“இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளேன். திரைப்படத் துறையில் எனது பங்களிப்புக்காக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் பெரும் மதிப்பைப் பெற்றுள்ளேன். என்னுடை நடிப்புத் திறமை, எனது தனி ஸ்டைல் போன்ற பல காரணங்களால் நான் ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றுள்ளேன். கடந்த பல ஆண்டுகளாக இந்திய சினிமாத் துறையில் புகழ்பெற்ற நடிகராக திகழ்கிறேன்.
இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த வர்ஷா புரொடக் ஷன்ஸ் என்ற நிறுவனம் மெய்ன் ஹூன் ரஜினிகாந்த் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளது. எனினும் எனது பெயரைப் பயன்படுத்த எவ்வித முன் அனுமதியும் பெறவில்லை. இந்தப் படத்தால் எனது புகழும், நற்பெயரும் பாதிக்கப்படும் என்பதால் எனது பெயரையோ, எனது படங்களையோ பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் ரஜினிகாந்த் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதி எஸ்.தமிழ்வாணன் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மெய்ன் ஹூன் ரஜினிகாந்த் படத்தின் சில காட்சிகள் நீதிமன்றத்தில் திரையிட்டு காட்டப்பட்டன. மேலும் ரஜினிகாந்த் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “கடந்த 1975-ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்கத் தொடங்கிய ரஜினிகாந்த் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவரது மிகச் சிறந்த நடிப்பால் அவர் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படுகிறார்.
இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த வர்ஷா புரடொக்சன்ஸ் என்ற நிறுவனத்தினர் ரஜினிகாந்த் பெயரை தவறாகப் பயன்படுத்தி மெய்ன் ஹூன் ரஜினிகாந்த் என்ற பெயரில் படம் தயாரித்துள்ளனர். இந்த படத்தில் பல மோசமான காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்தப் படம் வெளியானால் அதனால் ரசிகர்கள் மத்தியில் மனுதாரர் ரஜினிகாந்தின் புகழும், பெருமையும் பாதிக்கப்படும்” என்று வாதிட்டார்.
இதனையடுத்து நீதிபதி தமிழ்வாணன் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
“படத்தின் சில காட்சிகளைப் பார்த்ததில் இருந்தும், மனுதாரர் தரப்பு வழக்கறிஞரின் வாதத்திலிருந்தும் மெய்ன் ஹூன் ரஜினிகாந்த் படத்தால் மனுதாரருக்கு பாதிப்பு ஏற்படும் என்பது தெரிகிறது. ஆகவே, இந்த மனு தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
வழக்கின் விசாரணை செப்டம்பர் 25-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அதுவரை மெய்ன் ஹூன் ரஜினிகாந்த் படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது” என்று நீதிபதி கூறியுள்ளார்.