Thursday, 21 August 2014

Robin Williams (I) (1951–2014)


Date of Birth 21 July 1951, Chicago, Illinois, USA
Date of Death 11 August 2014, Tiburon, California, USA  (suicide)
Birth NameRobin McLaurin Williams
Height 5' 7" (1.7 m)

Mini Bio (1)

Robin McLaurin Williams was born on July 21, 1951 in Chicago, Illinois, a great-great-grandson of Mississippi Governor and Senator Anselm J. McLaurin. Robin briefly studied political science, before enrolling at Juilliard School to study theatre. After he left Juilliard, he performed in nightclubs where he was discovered for the role of Mork on an episode of Happy Days (1974) and the subsequent spin-off Mork & Mindy (1978). Williams' wild comic talent involved a great deal of improvisation, following in the footsteps of his idol Jonathan Winters. Williams has also proven to be an effective dramatic actor and received an Academy Award for Best Supporting Actor in Good Will Hunting (1997).On August 11, 2014, Robin Williams was found dead at his home in Tiburon, California USA, the victim of an apparent suicide, according to the Marin County Sheriff's Department. A 911 call was received at 11:55 AM PST, firefighters and paramedics arrived at his home at 12:00 PM PDT, and he was pronounced dead at 12:07 PM PST
Wednesday, 20 August 2014

உனுக்கு இன்னா பிரச்சன நைனா?



சென்னைத் தமிழ் வண்ண மயமானது. பல மொழிகளால் வளமூட்டப்பட்டது
சென்னையின் வழக்கமான காட்சிகளில் ஒன்றுதான் அது. கடுமையான போக்குவரத்து நெருக்கடி. பெரிய வாகனங்கள் முன்புறமும் எதிரிலும் வழியை அடைத்துக்கொண்டு நிற்கின்றன. இடது புறம் சிறிய இடைவெளி உள்ளது. அதன் வழியே சென்றால் முன்னேறிவிடலாம். உங்கள் முன்னால் இருப்பவரிடம் அதை விளக்கிச் சொல்ல முயற்சி செய்கிறீர்கள். அப்போது பின்னாலிருந்து ஒரு குரல்: “லெப்ட்ல வாங்க்கினு போ சார்”.
மெட்ராஸ் பாஷை எனச் சொல்லப்படும் சென்னைத் தமிழ் என்னும் சென்னை வட்டார வழக்கின் சிறப்புகளில் ஒன்று இந்தக் கச்சிதம். ‘கெலம்பு, காத்து வர்ட்டும்’ என்ற புகழ்பெற்ற தொடர் ஒன்று இதை மேலும் தெளிவாக்கும். எதிராளியிடம், “உன் பேச்சை நான் மதிக்கவில்லை; உன்னோடு பேசுவதால் நேரம்தான் வீணாகிறது; நீ இங்கே நிற்பதுகூடத் தொந்தரவாக இருக்கிறது; நீ நகர்ந்தால் குறைந்தபட்சம் எனக்குக் காற்றாவது வரும்” என்றெல்லாம் சொல்ல சில சமயம் நாம் விரும்பக்கூடும். ‘கெலம்பு, காத்து வர்ட்டும்' என்ற தொடர் இத்தனையையும் சிக்கனமாகச் சொல்லிவிடுகிறது.
தாராத்துட்டான்!
பீற்றிக்கொள்ளாதே, உணர்ச்சியை அதிகம் வெளியில் காட்டாதே, முழு உண்மையையும் வெளிப்படுத்திவிடாதே என்ற பொருள்களில் வழங்கிவரும் ‘அமுக்கி வாசி' என்னும் தொடர் இன்னொரு உதாரணம். இப்படி நிறையச் சொல்லலாம். தாராந்துட்டான், பூட்ட கேஸ், உடான்ஸு, மெர்சல், நாஸ்தி என சென்னைத் தமிழின் எந்தச் சொல் அல்லது தொடரை எடுத்துக்கொண்டாலும், சிக்கனம், உணர்ச்சியைக் கச்சிதமாக வெளிப்படுத்தும் பாங்கு, பிற மொழிகளைத் தகவமைத்துக்கொள்ளும் தன்மை எனப் பல சிறப்பம்சங்களை உணரலாம்.
கஸ்மாலம் என்ற சென்னைத் தமிழ் வசைச் சொல்லின் வேர்ச் சொல், வடமொழியில் உள்ள ‘கஸ்மலம்'. இதன் பொருள் அழுக்கு. ஜபூர்/ஜபுரு என்ற சொல்லின் வேர்ச் சொல் ஜபுர் என்னும் உருதுச் சொல். பொருள் ஜால வித்தை. அதே பொருளின் அங்கத வடிவில் ஜபுரு காட்டாதே என்று சென்னைத் தமிழில் வழங்கிவருகிறது. சென்னைத் தமிழ் பிற மொழிகளை எப்படி நுட்பமாக உள்வாங்கியிருக்கிறது என்பதை இதுபோன்ற சொற் களைக் கொண்டு புரிந்துகொள்ளலாம். பஜார், பேஜார், மஜா, கேடி, தௌலத், உல்ட்டா, உட்டாலக்கடி என உதாரணங்களை அடுக்கலாம்.
எதையாவது தொலைத்துவிட்டால் ‘தாராத்துட்டியா’ என்று சென்னைத் தமிழில் கேட்பார்கள். தன்னுடைய பொருளைத் தன்னுடையது அல்ல என்று முற்றாகத் துறந்து பிறருக்குத் தந்துவிடும் செயலே தாரை வார்த்தல். இந்தச் சொல்லின் பொருள் ஆழமாக உள்வாங்கப்பட்டுச் சற்றே அங்கதச் சுவையுடன் தாராத்துட்டியா எனத் தகவமைக்கப்பட்டிருக்கிறது.
பிற மொழிச் சொற்கள் சற்றே திரிந்த நிலையிலும் வித்தியாசமான பயன்பாட்டிலும் புழங்கிவருகின்றன. ‘அப்பீட்’ என்ற சொல் பம்பர விளையாட்டில் பயன்படுத்தப் படுகிறது. கீழே சுற்றும் பம்பரத்தைச் சாட்டையால் சுண்டித் தலைக்கு மேலே எழுப்பிப் பிடிப்பதுதான் அப்பீட். இது ‘அப் ஹெட்’ என்ற சொல்லிலிருந்து மருவி வந்தது என்ற தகவல், ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ என்னும் நாவலில் கூறப்படுகிறது. அம்பேல் என்னும் சொல் ஐ-ஆம்-ஆன்-பெயில் என்னும் தொடரின் மரூஉ என்றும் அந்த நாவல் சொல்கிறது. இவை இரண்டுமே மூலப்பொருளுக்கு நெருக்கமான பொருளிலேயே பயன்பட்டாலும், மாறுபட்ட சூழல்களில் வேறு பொருள்களையும் கொள்கின்றன. கிளம்புகிறேன் (நான் அப்பீட்டு) என்றும் ஆளை விடுங்கள் (அம்பேல்) என்றும் வழங்கப்படுகின்றன. ஒரு சொல் வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு வடிவங்கள் எடுப்பது மொழியின் அழகு அன்றி வேறென்ன?
மொழி கூறும் வரலாறு
சென்னை மொழிக்கு வேறு எந்த வட்டார வழக்குக்கும் இல்லாத தனித்தன்மை - பல மொழிகள் கலந்த தன்மை - உள்ளது. சென்னைக்கு மிக அருகில் இருக்கும் ஆந்திரப் பிரதேசத்தின் தாக்கத்தை நைனா, டப்பு, துட்டு போன்ற சொற்களிலும் (எனக்)கோசரம், (அதுக்)கோசரம் போன்ற வழக்குகளிலும் காணலாம். ஆங்கிலம், தெலுங்கு, உருது, இந்தி ஆகிய மொழிகளின் கலப்பை ஆராய்ந்தால், பிற மொழி மக்களுடனான சென்னையின் தொடர்பையும் வரலாற்றுரீதியில் புரிந்து கொள்ளலாம்.
இந்த அளவுக்கு வண்ண மயமான, பல்வேறு மொழிகளால் வளமூட்டப்பட்ட இன்னொரு வழக்கை எந்த மொழியிலும் காண்பது அரிது. இத்தகைய வழக்கை மரியாதையுடன் ஆராய்வதற்குப் பதிலாக, இழிவுபடுத்தும் போக்கே பொதுவாக நிலவுகிறது. சென்னைத் தமிழின் கொச்சை வழக்கைக் கேட்ட மாத்திரத்தில் கூசிப்போகும் மேட்டுக்குடியினர் பலர் இருக்கிறார்கள். பலரும் இதைத் தமிழின் இழிவழக்காகக் கருதி விமர்சனமும் பரிகாசமும் செய்வதுண்டு. கூவம் பாஷை என்று சொல்லும் அளவுக்குச் சிலர் போய்விடுகிறார்கள். நாற்றமெடுக்கும் கூவத்தோடு இம்மொழி ஒப்பிடப்படுவது தற்செயலானது அல்ல. தமிழ்ப் பரப்பின் பொதுப்புத்தியின் பார்வை இது.
வட்டார வழக்குகள் ஒரு மொழியின் உயிர்ப்பை உணர்த்தும் அடையாளங்கள். மதுரைத் தமிழ், கொங்கு தமிழ், கரிசல் தமிழ், நாஞ்சில் தமிழ், ஈழத் தமிழ் போல சென்னைத் தமிழும் ஒரு வட்டார வழக்குதான். எல்லா வட்டார வழக்குகளையும் போலவே பல்வேறு இயல்பான காரணிகளால் உருவாகி, தொடர்ந்த பயன்பாட்டினால் உருமாறிவரும் ஒரு வழக்கு அது.
களுத மட்டும் சரியா?
சென்னைத் தமிழை இழிவுபடுத்துபவர்கள் அதன் உச்சரிப்புத் திரிபுகளையும் (வலிச்சிக்குனு, இஸ்துகினு) கொச்சைகளையும் (துன்ட்டியா) சுட்டிக்காட்டுவார்கள். குறைகளும் திரிபுகளும் எல்லா வழக்குகளிலும் உள்ளன. வந்துகொண்டிருக்கிறேன் என்பதை வந்துட்ருக்கேன், வந்துக்கிருக்கேன், வந்துண்ட்ருக்கேன் என்றெல்லாம் சொல்வது வட்டார/சாதி வழக்காக அங்கீகாரம் பெறுகிறது. ஆனால், வந்துனுருக்கேன் என்றால் மட்டும் அது இழிவழக்காகக் கருதப்படுகிறது. கஷ்டம் என்பதை கஸ்டம் என்று சென்னைத் தமிழர் சொல்கிறார் என்றால் சிவாஜி என்பதை ஜிவாஜி என்று நெல்லைத் தமிழர்கள் சிலர் சொல்லத்தான் செய்கிறார்கள். கழுதையைக் கய்தே என்பது சென்னைத் தமிழ் வழக்கு. இதைக் களுத என்று சொல்லும் தமிழர்கள் தமிழகமெங்கும் இருக்கிறார்கள். ஆனால், சென்னைத் தமிழின் கொச்சை மட்டும் பரிகசிப்புக்கும் இழிவுக்கும் உள்ளாக்கப்படுகிறது.
வசைச் சொற்களை வைத்து சென்னைத் தமிழை இழிவாகப் பார்க்கும் போக்கும் உள்ளது. வசைச் சொற்கள் சென்னைத் தமிழின் தனிச் சொத்து அல்ல. எல்லா மொழிகளையும் போலவே தமிழிலும் வசைச் சொற்கள் நிறையவே உள்ளன. சென்னைத் தமிழைப் பேசுபவர்கள் அவற்றை அதிகம் பயன்படுத்துவதால் சென்னைத் தமிழே வசைத் தமிழ் ஆகிவிடாது. கெட்ட வார்த்தைகளை அதிகம் பேசும் பிற வட்டாரத்து மக்களின் வட்டார வழக்குகளுக்கும் இதே அளவுகோல் பின்பற்றப்படுவதில்லை என்பதைப் பார்க்கும்போது, சென்னைத் தமிழின் மீதுள்ள ஒவ்வாமைக்குப் பின் உள்ள மேட்டிமைத்தனத்தைப் புரிந்துகொள்ளலாம். சென்னைத் தமிழை ரசிக்கும் சிலரும் தட்டிக்கொடுக்கும் மனப்பாங்கோடுதான் அதை அணுகுகிறார்கள்.
வாழும் மொழிக்கான பல்வேறு இலக்கணங்களையும் தேவைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் சென்னைத் தமிழ் என்னும் வட்டார வழக்கை மொழி மீது அக்கறை உள்ள யாரும் புறக்கணிக்கவோ இழிவுபடுத்தவோ மாட்டார்கள். மொழியின் தன்மைகள் இடம், தொழில், சாதி வரலாறு ஆகிய காரணங்களால் மாறுவது மிக இயல்பானது. வெகுமக்கள் பண்பாடு, பழக்க வழக்கங்கள், மொழிக் கூறுகள் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகள் பல்வேறு கோணங்களில் ஆராயப்பட வேண்டியவை. இதில் உயர்வு, தாழ்வு காண்பது மேட்டிமைவாதம். அந்த மேட்டிமைத்தனத்தைக் கைவிட்டு, சென்னைத் தமிழை முறையாக அணுகு வதற்கான பார்வையை வளர்த்துக்கொள்வதே மொழி யின் மீதுள்ள நம் அக்கறையை வெளிப்படுத்தும்.
- அரவிந்தன்,
தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

தெலங்கானா இந்தியாவைச் சேர்ந்ததுதானே?


தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டின் எல்லா மூலைகளிலிருந்தும் தங்கள் மாநிலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று தெலங்கானா அரசு எடுக்கும் மகா கணக்கெடுப்பின்போது, தங்களுடைய வசிப்பிடத்தில் இல்லா விட்டால் தெலங்கானாவில் தங்களுக்குரிய உரிமைகளும் சலுகைகளும் பறிபோய்விடுமோ என்ற அச்சமும் பீதியும்தான் இதற்குக் காரணம்.
மாநில அரசு வழங்கும் இலவசங்களையும் மானிய உதவிகளையும் தகுதியற்ற பலர் அனுபவித்துவருவதாலும், போலி குடும்ப அட்டை உலவுவதாலும் புதிய கணக்கெடுப்பு எடுப்பதென்று முடிவு செய்திருப்பதாக மாநில அரசு கூறுகிறது. மாநிலத்தில் 84 லட்சம் குடும்பங்கள் இருப்பதாகவும் நான்கு லட்சம் கணக்கெடுப்பாளர்கள் மூலம் அவர்களை ஒரே நாளில் கணக்கெடுத்துவிடப்போவதாகவும் அந்த அரசு அறிவித்துள்ளது. குடும்ப அட்டை, பாஸ்போர்ட், மின்சார இணைப்பு, கல்வி மானிய உதவிகள், இருப்பிடச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் போன்றவற்றுக்காக இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுவதால், வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்றவர்கள்கூடத் தங்களுடைய வேலைகளையெல்லாம் அப்படியே அரைகுறையாக விட்டுவிட்டு, விழுந்தடித்துக்கொண்டு ஊர் திரும்புகின்றனர்.
மாநிலத்தில் இன்று பெட்ரோல் நிலையங்கள், மருந்துக் கடைகள், இதர வர்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள் மூடியிருக்கும். டாக்சி, ஆட்டோ போன்றவை ஓடாது. அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள், தனியார் பேருந்துகள்கூட அரசின் கட்டுப்பாட்டில் அவசியப்பட்டால் மட்டுமே ஓடும் என்று தெரிகிறது.
மூன்றாம் உலகப் போருக்குத் தயாராகும் நாட்டைப் போல தெலங்கானா அரசு இத்தகைய கெடுபிடிகளையும் ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறது. தெலங்கானா பகுதியில் வசிக்கும் ஆந்திர மாநிலத்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தெலங்கானா அரசின் எந்த உதவியும் கிடைக்காமல் தடுப்பதற்காகத்தான் இந்தக் கணக்கெடுப்பு என்று ஆந்திரர்கள் உள்ளூர அஞ்சுகின்றனர்.
“சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரம் பிரிந்தபோதுகூட, தெலுங்கர்கள் எந்த வித மன உளைச்சலும் பாதிப்பும் இழப்பும் இல்லாமல் விரும்பிய ஊர்களில் அப்படியே தொடர்ந்து வசித்தனர். தெலங்கானா முதல்வரின் நடவடிக்கைகள் ஜென்ம விரோதிகளைக் கணக்கெடுப்பதைப் போலத் தெரிகிறது” என்று தெலுங்கு சம்மேளனத் தலைவர் ஒருவர் கூறியிருப்பது கவனிக்கத் தக்கது. சத்தீஸ்கர், உத்தராகண்ட், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் பிற மாநிலங்களி லிருந்து பிரிந்தபோதும் இப்படி நடந்ததில்லை.
பிற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் வேலைக்காகச் சென்ற உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு தெலங்கானா அரசின் இந்த அதிரடி முடிவு ஏற்படுத்தியிருக்கும் வேதனை சொல்லி மாளாது. படிப்பறிவற்ற அவர்களுக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தரப்போகும் இழப்பீடு அல்லது மாற்று வேலை என்ன?
போலி குடும்ப அட்டைகள் இல்லாத மாநிலங்களே இல்லை. ஒரே நாள் கணக்கெடுப்பில் இது போன்ற பிரச்சினைகள் தீராது. கோடிக் கணக்கில் வரி ஏய்க்கும் பணக்காரர்களையும், கனிமங்களைக் கொள்ளையடிக்கும் சுரங்க முதலாளிகளையும், வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு ஏப்பம்விடும் தொழிலதிபர்களையும் கணக்கெடுத்து, அவர்களிடமிருந்து பணத்தை மீட்க வேண்டியதுதான் சந்திசேகர் ராவ் உடனடியாகச் செய்ய வேண்டிய விஷயம். அதை விடுத்து, இப்படியொரு அதிரடிக் கணக்கெடுப்பை மேற்கொள்வதால், இந்தியாவுக்குள்ளே இன்னொரு நாடாக தெலங்கானா செயல்படக் கூடிய அபாயம்தான் ஏற்படும்.
Thursday, 14 August 2014

லண்டன்: கனவுகளின் தேசம் அல்ல



வந்தாரை வாழவைக்கும் நகரம் என்ற பெயரை லண்டன் தற்போது இழந்திருக்கிறது.
மட்டக்களப்பிலிருந்து எனது நீண்ட கால நண்பர் தொலைபேசி எடுத்துச் சொன்னார். “உங்கை லண்டனுக்கு எனது சொந்தக்காரப் பொடியன் (இளைஞன்) ஒருத்தன், ஸ்ருடன்ற் (ஸ்டூடண்ட்) விசாவில் வாறான். ஒரு வேலை எடுத்துக் கொடுங்கோ”. இப்படியான தொலைபேசி அழைப்புகள் சிலோனிலிருந்து அடிக்கடி எனக்கு வரும். லண்டன் பெரும் சீமை என்று ஒரு பெருமை அந்தக் காலத்தில் இருந்தது. பொருளாதாரச் சிக்கல்களுக்கான தீர்வின் இடமாகவும் லண்டன் முன்பு ஒரு காலத்தில் இருந்ததுதான். ஆனால், இப்போது அப்படி இல்லை.
ஏஜென்டுகளுக்கு 15 லட்சம், 20 லட்சம் ரூபாய் கொடுத்து விசா வாங்கி இங்கு வந்து இறங்கி விமானத்தில் வைத்து கடவுச்சீட்டைக் கிழித்துக் கழிப்பறைக்குள் போட்டுவிட்டுக் குடிவரவுப் பிரிவில் வந்து நின்றுகொண்டு, “எனக்கு போக்கிடம் இல்லை” என்று சைக்கினையில் குடிவரவு அதிகாரியிடம் சொல்ல, அவர் கூட்டிக்கொண்டுபோய் அகதி அந்தஸ்து கொடுத்ததெல்லாம் பழைய கதை.
இப்போதெல்லாம் அகதிகளுக்கு, குடியேற்றவாசி களுக்கு, பெரும் இறுக்கமான கொள்கையைக் கடைப் பிடிக்கத் தொடங்கிவிட்டது லண்டன். எல்லாம் இந்த கன்சர்வேட்டிவ் அரசு வந்த பிறகுதான். இந்த அரசு எப்படியாவது வெளிநாட்டுக்காரர்களை ஒரு வழியாக ஒழுங்குபடுத்த வேண்டும் என்று துடிப்பாக வேலை செய்கிறது.
இங்கிலாந்து அரசின் அதிரடி மாற்றம்
முதல் அகதி அந்தஸ்து கேட்டு இதுவரை தங்கி யிருந்த ஆயிரக் கணக்கானவர்களுக்கு விசா கொடுத்திருக் கிறார்கள். ஆனால், புதியவர்கள் விஷயத்தில் அரசு கடும் போக்கையே கொண்டிருக்கிறது. இப்போது பிரிட்டனும் மேற்கத்திய நாடுகளும் அகதிகளைத் துரத்திக்கொண்டிருக்கின்றன. அகதிகளை அங்கு வர வேண்டாம் என்று பகிரங்கமாகவே விளம்பரம் போட்டுச் சொல்கிறது ஆஸ்திரேலியா. ஐரோப்பிய நாடுகள் அகதிகள் விஷயத்தில் எந்த இரக்கமும் காட்டத் தயாராக இல்லை. வேலை செய்ய முடியாமலும் காப்பீட்டு எண் (இன்ஸூரன்ஸ் நம்பர்) இல்லாமலும் அகதிகளாகப் பதிய முடியாமலும் ஆயிரக் கணக்கானவர்கள் வீதிகளில் அலைந்துகொண்டிருக்கின்றனர். இப்படியாக சட்டவிரோதமாக லண்டனில் இருப்பவர்களைக் காவல் துறையினரும் குடிவரவுத் துறையும் சேர்ந்து கைதுசெய்துவருகின்றனர்.
நாட்டுக்கு உள்ளே வரும் சட்டவிரோதக் குடியேறி களையும், ஏற்கெனவே தங்கியிருப்பவர்களையும் உடனடியாகப் பிடித்து நாடுகடத்துவதற்கு யு. கே. போடர் ஏஜென்சி எல்லா வகையான கடும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று குடிவரவுத் துறை அமைச்சர் சொல்கிறார். “விசா இல்லாதவர்களைக் கைதுசெய்து நாடுகடத்துவோம். லண்டன் முழுவதிலும் இவ்வாறான கைது நடவடிக்கைகள் துரிதமாக்கப்படும்'' என்று பிரெண்ட் உள்ளூர் குடிவரவுத் துறை உதவி பணிப்பாளர் ஸ்டீவ் பிஸர் கூறுகிறார்.
காப்பீட்டு எண், உரிய விசா போன்றவை இல்லாதவர் களை வேலைக்கு வைத்திருக்கும் கடை முதலாளிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் பெருமளவில் அபராதம் விதிக்கப்படும். காப்பீட்டு எண் இல்லாத ஒருவரைப் பணியில் வைத்திருந்தால் கடைக்காரர் 20 ஆயிரம் பவுண்டுகள் தண்டப் பணம் கட்ட வேண்டும். இதுதான் சட்டம் இங்கு.
வேலை கிடைப்பது குதிரைக் கொம்பு
நாங்கள் லண்டனுக்கு வந்த தொண்ணூறுகளில் பெட்ரோல் நிலையம் வைத்திருக்கும் தமிழர் யாராவது எங்களுக்கு வேலை தருவார். தமிழர் கடைகள், தமிழர்களின் பெட்ரோல் நிலையங்கள் எங்களுக்குப் பெரும் உதவியாக இருந்தன. ஆனால், இப்போது 20 ஆயிரம் பவுண்டுகள் தண்டப் பணத்தைக் கட்டுவதற்கு எல்லோரும் பயந்துபோய் இருக்கின்றனர். அதனால், சட்டவிரோதமாக வேலை தர யாரும் அஞ்சுகிறார்கள்.
இங்கு லண்டனுக்கு மாணவர்களாக வருகிறவர்கள் மாணவர் விசாவில் வந்துவிட்டுக் கல்லூரிக்குப் போகாமல் லட்சம் லட்சமாய் சம்பாதித்துப் பணக்காரர்களாகலாம் என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை. எனக்குத் தெரிந்த பொடியன் ஒருவன் பயண நிறுவனம் ஒன்றுக்கு ரூ.15 லட்சம் கொடுத்து 2 வருட விசா வாங்கியிருக்கிறான். லண்டன் போய் 15 மாதத்தில் கட்டிவிடலாம் என இங்கு வந்திருக்கிறான். அங்கு சிலோனில் ஊர் முழுக்கக் கடன். பெற்றோர்கள் ‘மகன் லண்டனில் இருக்கிறான். கடனைக் கட்டிவிடலாம்' என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள். இங்கு மகனுக்குக் கிழமைக்கு 10 மணித் தியாலம்தான் வேலை. அதுவும் கோழி பொரிக்கும் கடையில் கிழமைக்கு (வாரத்துக்கு) 40 பவுண்டுகள்தான் அவனுடைய உழைப்பு. பங்கு போட்டுத் தங்கும் அறையின் வாடகையே மாதம் 200 பவுண்டுகள். படிப்புமில்லை, வேலையுமில்லை. இங்கு நாயாய், பேயாய் நடுத்தெருவில் அலைந்துகொண்டிருக்கிறான்.
விசா இல்லாதவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது இங்கே. ஒரு வங்கிக் கணக்கைத் திறக்கவோ, நோய் என்றால் மருந்து எடுக்கவோ, வாகனம் ஓட்டத் தெரிந்தால் ஓட்டுநர் உரிமம் எடுக்கவோ ஒன்றும் முடியாது. ‘பல்லுக் கழட்டின பாம்பாட்டம்’ எத்தனை நாளைக்கு லண்டனில் இருப்பது?
நாடு கடத்தல்
அது மட்டுமல்ல. மாணவர்கள் கிழமைக்கு 20 மணி நேரத்துக்கு அதிகமாக வேலை செய்ய முடியாது. இது சட்டம். அதிக நேரம் வேலைசெய்து பிடிபட்டால் அந்த மாணவர் உடனடியாக நாடு கடத்தப்படுவார். வேலை கொடுத்தவருக்கு 20,000 பவுண்டுகள் அபராதம். ஏற்கெனவே, அகதிகளாக உள்ளவர்களுக்கு விசாவை வழங்கிவிட்டு ஏனையோரைத் திருப்பி அனுப்பும் நடைமுறை இப்போது லண்டனில் துரிதப் படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கடந்த வாரம் எனக்குத் தெரிந்த ஒருவர் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். அவர் ரூ.20 லட்சம் கொடுத்துக் களவாக ஜெர்மனி வந்து, பிறகு சரக்கு லாரி மூலமாக லண்டன் வந்தவர். பெண்சாதி பிள்ளைகள் இப்போது ஊரில் இருக்க முடியாமல் காலிப்பக்கமாக (காலி- ஒரு ஊர்) போய்விட வேண்டியதுதான் என்று கொழும்பிலிருந்து என்னோடு பேசும்போது சொன்னார். ஊரில் இருந்தால் கடன்காரர் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டுவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது என்கிறார் அவர்.
இப்போது லண்டனில் வீடுகளுக்கு வந்தும் காவல் துறையினரும் குடிவரவு அதிகாரிகளும் சோதனையிடுகிறார்கள். சாலையில் வைத்தும் சோதனையிடு கிறார்கள். தங்களுக்கு விசா கிடைத்தவுடன் அரசாங் கத்துக்கு விரோதமாக அகதிகள் நடந்துகொள்கிறார்கள். அதுதான் அகதிகள் மீதும் பெரும் கோபம் அரசாங் கத்துக்கு. அண்மையில்கூட ஒரு தமிழ்க் குடும்பம் அகப்பட்டது. அகதிகளால்தான் சட்டவிரோதச் செயல்கள் அதிகரிக்கின்றன என்று புதிய அரசு ஆரம்பம் முதலே சொல்லிவருகிறது.
போலித் திருமணங்கள்
பிரிட்டனில் உள்ள சட்டவிரோதக் குடியேற்றக் காரர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என்று அந்நாட்டின் குடிவரவுத் துறை அமைச்சர் டேமியன் கிரீன் தெளிவாகச் சொல்கிறார். விசாவுக்காகப் பொய்யாகத் திருமணம் செய்துகொள்பவர்களுக்குக் கடுமையான தண்டனை தரப்படும் என்கிறார் அவர். போலியான திருமணங்கள், சட்ட விரோதப் பணியாளர்கள், சட்டவிரோத ஆள்கடத்தல் போன்ற குற்றங்களுக்குக் கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் டேமியன் சொல்கிறார். 2015 தேர்தலுக்கு முன்னதாக பிரிட்டனின் குடிவரவு பல்லாயிரக் கணக்கில் குறைக்கப்படும் என்று திட்டவட்டமாக அவர் சொல்கிறார்.
பிரிட்டனின் எல்லைகள் சிறப்பான முறையில் பாதுகாக்கப்படவில்லை என்று ஏனைய நாடுகள் கருதுகின்றன. பிரிட்டனுக்குள் வந்துவிட்டால் இங்கு சுலபமாக இயங்க முடியும், சட்டவிரோதமாகத் தொழில்செய்ய முடியும் என்று நினைப்பவர்களின் எண்ணத்தை அடியோடு மாற்றுவோம் என்றும் சட்ட விரோதக் குடியேறிகளுக்குக் கடினமான தண்டனை வழங்குவதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்துவோம் என்றும் அமைச்சர் சொல்கிறார். அதனால்தான் இனிமேல் கனவுகளின் தேசமாக இருக்காது லண்டன் என்று நான் சொல்கிறேன்.
- இளைய அப்துல்லாஹ், புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் எழுத்தாளர், தொடர்புக்கு: anasnawas@gmail.com

நான் பையனாக இருந்த பருவம்!



இதை எழுதும்போது எனது மகன் ஷான், காதில் பொருத்தப்பட்ட ஹெட்போன் மூலம் ‘கேட் எம்பயர்ஸ்' இசைக் குழுவின் பாடலைக் கேட்டபடி வீட்டுக்கு வெளியே ஒரு சக்கர மிதிவண்டியை ஓட்டிக்கொண்டிருக்கிறான்.
அழகான நண்பகல் நேரமிது. ஷான், கல்லூரியில் சேர்வதற்கு முன்னதான ஒரு கோடைக் காலம்! தனது வாழ்வில் பல கோடைக் காலங்களை ஷான் பார்ப்பான் என்றாலும், இந்த சில வாரங்கள்தான் அவன் சுதந்திரமாக உலவுவான்.
எனது மகன்களைப் பற்றிய நினைவுகளுடன் எனது சிறுவயது நினைவும் என்னைச் சூழ்கிறது. சமீபத்தில் சர்வதேச திரைப்பட விழா ஒன்றில், ரிச்சர்டு லிங்க்லேட்டர் இயக்கிய ‘பாய்ஹுட்', 8 வயதில் ஆபிரகாம் லிங்கனை பாதித்த அடிமை முறை பற்றிய திரைப்படமான ‘தி பெட்டர் ஏஞ்சல்ஸ்' ஆகியவற்றைப் பார்த்தேன்.
இரு திரைப்படங்களுக்கும் இடையே ஒரு ஒற்றுமை உண்டு. ‘பாய்ஹுட்' படத்தின் தொடக்கக் காட்சியில், புல்தரையில் படுத்துக்கொண்டே வானத்தில் மிதந்து செல்லும் மேகங்களைப் பார்க் கிறான், ஏழு வயது மேசன். ‘தி பெட்டர் ஏஞ்சல்ஸ்' படத்திலும் இதே போன்ற காட்சி வருகிறது. எதிர்கால எழுச்சி நாயகர்கள் இருவரும் கோடைக் கால மேகங்களின் நகர்வை ரசிக்கின்றனர்.
1960-களில் நானும் அதுபோன்ற கோடைக் காலங்களைக் கடந்துவந்திருக்கிறேன். ஆணாக இருந்து பின்னர் பெண்ணாக மாறும் ஒருவர் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளையும் பிற்காலத்தில் நானும் எதிர்கொண்டிருக்கிறேன். எனினும் எனது இளமைக்காலத்தில், ஒரு சிறுவனுக்குரிய அனைத்து செயல்களையும் செய் திருக்கிறேன். பேரானந்தத்துக்குரிய அனுபவம் அது. பென்சில்வேனியாவின் வயல்வெளிகளிலும் வனப் பகுதியை ஒட்டிய கிராமப்புறங்களிலும் எனது இளமைக் காலம் கழிந்தது. ஏரிகளில் மீன்பிடிக்கச் சென்றதும், பாலங்களிலிருந்து ஓடைகளில் குதித்து நீந்தியதும், அப்பாவுடன் இணைந்து வெடி வெடித்ததும் நினைவில் நிற்கின்றன. கோடைக் கால விடுமுறையின்போது கைவிடப்பட்ட பள்ளி மைதானத்தின் பின்புறம் கெவின் வால்ஷ் என்ற சிறுவனிடம் கெட்ட வார்த்தைகளைக் கற்றுக் கொண்டதும்தான்!
எனது துணைவி டெய்ர்ட்ரி தனது கோடைக் கால இளமை தருணங்களைப் பற்றிச் சொல்லி யிருக்கிறாள். ஆச்சரியம் என்னவென்றால், எனது இளமைக் கால நினைவுகளின் பட்டியலுக்கும் அவளுடைய அனுபவங்களுக்கும் பெரிய வித்தி யாசமில்லை. பிற்காலத்தில், சங்கடம் தரும் வகையில் பாலின மாற்றத்தை எதிர்கொள்ள நேர்ந்தாலும், இளமையில் ஒரு சிறுவனாக நான் கழித்த கோடைக் கால நினைவுகள் என்னை விட்டு இன்னும் அகலவில்லை. அந்தச் சிறுவனின் கனவுகள் என்னிடம் பத்திரமாக இருக்கின்றன.
‘தி பெட்டர் ஏஞ்செல்ஸ்' திரைப்படம் பனிப் போர்வை போர்த்திய லிங்கன் நினைவிடத்திலிருந்து தொடங்கி, 1817-ம் காலத்திய இண்டியானா பகுதிக்கு சட்டென மாறுகிறது. காட்சிகள் செல்லச் செல்ல அந்தச் சிறுவன் எப்படிப் பின்னாட்களில் அமெரிக்காவின் அதிபராகிறான் என்ற ஆச்சரியம் மேலிடுகிறது. தனக்குள் இருந்த சிறுவனைப் போர்க்களத்தில் லிங்கன் உணர்ந்திருப்பாரா?
முதிர்ந்த தங்கள் உடல்களுக்குள் தங்கள் இளம் பிராயத்துச் சிறுவர்களைத் தேடும் ஆன்மாக்கள் இந்த உலகம் முழுதும் நிரம்பியுள்ளன. எனக்குள் இருந்த சிறுவனின் தேடலில் பல முறை நான் கண்ணீர் சிந்தியிருக்கிறேன். என்னை ஒரு சிறுவனாகப் பார்த்தவர்களில் யாரும் இன்று உயிருடன் இல்லை. அதில் எனக்கு வருத்தமுண்டு. எனக்குள் நான் அடிக்கடிக் கேட்டுக்கொள்ளும் கேள்வி: “நான் எப்படி, இப்படி ஆனேன்?” இதற்கான விடையைக் கண்டுபிடிப்பது என்பது கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையிலான அமைதியைக் கண்டுபிடிப்பதற்கு ஒப்பானது.
இன்றும், வானில் மிதக்கும் மேகங்களைப் பார்க்கும் சமயங்களில், இளம் வயதில் கடந்துவந்த கோடைக் காலங்களை நினைத்துக்கொள்வேன். என் மகனைப் பார்க்கும்போது என்னுள் அன்பும், இழப்பின் வலியும் பெருகுகின்றன. ‘தி பெட்டர் ஏஞ்சல்ஸ்' படத்தில் லிங்கனின் ஆசிரியர் சொல்லும் வார்த்தைகளை என் மகனிடம் சொல்ல விரும்புகிறேன். லிங்கன் தனது வீட்டை விட்டுத் தொலைதூரப் பயணத்தைத் தொடங்கும்போது, ஆசிரியர் சொல்கிறார்: “இந்த வனத்தில் அவன் இனி இருக்கப்போவதில்லை. அவன் தனது சுவடுகளைப் பதிப்பான்!”
- © நியூயார்க் டைம்ஸ், தமிழில்: வெ. சந்திரமோகன்

சிங்கம், சிறுத்தைகளைக் காக்கும் துணிச்சலரசி: 'கிர்' பூங்காவில் ஒரு 'கெத்து'க் கதை!


ரஷீலா வதேர்

இந்த சமுதாயத்திலுள்ள கானகக் காவலர்கள் சந்திக்காத துயரமல்ல, வாங்காத அடிகள் இல்லை. அதிலும், அவர் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில்... சொல்லவே தேவையில்லை. ஆனால், இந்த கானகக் காவலர் தலைநிமிர்ந்து நிற்க, தொடக்கப்புள்ளியாக அமைந்தது ஒரு திரில்லிங்கான சம்பவம்.
குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் காட்டில், காட்டுப்பூனை ஒன்று துரத்தியதில் ஒரு சிறுத்தை கிணற்றில் விழுந்துவிட்டது. எப்படி முயற்சித்தும் அதனை வெளியில் எடுக்கமுடியவில்லை. சிறுத்தையைக் காப்பாற்ற கடைசி முயற்சியாக, களமிறங்கியவர் ரஷீலா வதேர். அவருக்கு இது தனக்கான நேரம் என்று தெரிந்திருந்தது.
கிணற்றில் இறங்கி, அந்த விலங்கு அருகே சென்று, அதற்கு மயக்க ஊசி செலுத்தி, காப்பாற்ற வேண்டிய நிலை.
இந்த பரபரப்பான சம்பவம் குறித்து கானகக் காவலர் ரஷீலா கூறுகையில், “அந்த 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில், நாங்கள் ஒரு கயிற்றை இறக்கினோம். ஆனால், அதனை அந்த சிறுத்தைக் கடித்து துப்பியது. நான் அப்போதுதான் முதல்முறையாக கிணற்றில் இறங்கினேன்", என்று கூறினார்.
ரஷீலா வதேர், ஜுனாகத் மாவட்டத்தில் பங்தோரி கிராமத்தைச் சேர்ந்தவர். குஜராத்தில் ஆசிய சிங்கத்தின் தாயகமாக கருதப்படும் சசன் கிர் தேசிய பூங்காவில், கடந்த ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றார். கிணற்றிலும், சேற்றிலும் தவறிவிழுந்த சிங்கங்கள், சிறுத்தைகள், மலைப்பாம்புகள் உள்ளிட்ட விலங்குகள், மனித வாழ்விடத்திற்கு வழி தவறிச்சென்றுவிட்ட விலங்குகள் என இதுவரை 800 விலங்குகளைக் காப்பாற்றியுள்ளார்.
“முதலில், எனக்கு மிகவும் அச்சமாக இருந்தது. ஆனால், இன்று எனக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது. காட்டில் சின்ன சின்ன வேலைகளைச் செய்யவே பெண்கள் தகுதியானவர்கள் என்று ஆண் அதிகாரிகள் நினைத்தனர். எங்களுக்கு கடினமான பணிகள் அளிக்கப்படவில்லை. அலுவலத்தில் ஆறு மாத காலம் பணிபுரிந்தபின், நான் ஏதாவது முக்கியமான பணி செய்யவேண்டும் என்று கருதினேன். அப்போது, விலங்குகளைக் காப்பாற்றும் பணிக்கு, பெண் பாதுகாவலர்கள் யாருமில்லை”, என்று தெரிவித்தார்.
2007-ஆம் ஆண்டு கிர் காட்டைப் பாதுகாக்கும் பணிக்காக 44 பெண் கானகக் காவலர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தனர். அதில் ரஷீலாவும் ஒருவர். இது குஜராத் மாநிலத்தில் நநேந்திர மோடி முதல்வராக இருந்தபோது, பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி நிறைவேற்றப்பட்ட திட்டமாகும்.
இவர் துணிச்சலுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் மட்டுமல்லாமல், மோடி உள்ளிட்ட தலைவர்களிடமிருந்து விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. இவரைக் குறித்து கிர் பூங்காவின் துணை காப்பாளர் சந்தீப் குமார் பேசுகையில், “ரஷீலாவின் ஆண்டு ஊதியமான ரூ.60,000 விடவும் அதிகமான பரிசுத்தொகை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. முதலில், தங்களால் முடியுமா என்று பல பெண் ஊழியர்கள் சந்தேகப்பட்டனர். ஆனால் அவர்கள் தற்போது ஒவ்வொரு துறையிலும் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்த பணிக்கு லட்சக்கணக்கான பெண்கள் விண்ணப்பிக்கிறார்கள்”, என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
காட்டில் இருக்கிறோம் என்ற பயத்தை விடவும், இந்த பெண் காவலர்களுக்கு வேறு சில பிரச்சினைகளும் உள்ளன. வீட்டிலிருந்து தனியாக காட்டில் வாழ்வது, ஆண் ஊழியர்களுடன் வேலை செய்வது குறித்த சமுதாயப் பார்வையை சமாளிப்பது மேலும் ஒரு சவாலாக உள்ளது.
உதாரணமாக, இங்கு பணிபுரியும் த்ரீப்தி ஜோஷி என்பவருக்கு திருமணம் ஆனபோது, அவரது புகுந்த வீட்டில் இந்த பணியைத் தொடர அனுமதிக்கவில்லை. ஆனால் அவர் தந்தை இடைமறித்து, அவர் இந்த பணியிலேயே தொடர வழிசெய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு புதிய பரிணாமம்
இந்த பணிக்கு, பெண் காவலர்கள் சேர்ந்தபின், மனித-விலங்கு போராட்டத்தை சமாளிப்பதில் ஒரு புதிய பரிணாமம் பெற்றுள்ளது. கொடூரமான விலங்குகளை விடவும் மனிதர்களை கையாளுவதே கடினம் என்று இவர்கள் தெரிவிக்கின்றனர்.
“இந்த பணி குறித்து மக்களின் புரிதல் வேறாக இருக்கிறது. விலங்குகளை மீட்கும் இரு வேறு பணிகள் ஒரே மாதிரி இருப்பதில்லை.”, என்று கூறுகிறார் ரஷீலா. ஒரு காலத்தில் காடு என்பது எப்படியிருக்கும் என்று தெரியாத நிலையிலிருந்து, மிக பயங்கரமான விலங்குகளைக் காக்கும் ஒரு காவலராக மாறியிருப்பது வரை, மிக நீண்ட பாதையை ரஷீலா கடந்து வந்திருக்கிறார். ஒரு மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிறுத்தை ஒன்று இவரது வலது கையைக் காயப்படுத்திய தழும்பு இன்றும் இருக்கிறது. கிட்டதட்ட 15 தையல்கள் போடப்பட்டுள்ளன. “என் அம்மா இந்த தழும்பை பார்த்தபோதுதான், என் பணியின் இயல்பு என்ன என்று அவர் தெரிந்துக்கொண்டார்”, என்று கூறிமுடிக்கும் இந்த வீரப் பெண்மணிக்கு ஒரு ராணுவ சல்யூட் அடிக்க தோன்றுகிறது.
தமிழில்: எம்.ஆர்.ஷோபனா

ராபின் வில்லியம்ஸ்: உறைந்த புன்னகை


ராபின் வில்லியம்ஸ் | கோப்புப் படம்
மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ராபின் வில்லியம்ஸ் இறந்துவிட்டார் என்ற தகவல், ஹாலிவுட்டை மட்டுமல்லாமல், உலகமெங்கும் உள்ள திரை ரசிகர்களைத் துக்கத்தில் ஆழ்த் தியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக மன அழுத் தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எத்தனையோ பேரின் மனஅழுத்தத்தைத் தனது நகைச்சுவை நடிப்பால் நீக்கியவர் தற்கொலை செய்துகொண்டிருப்பாரா என்ற அதிர்ச்சியில் உலக ரசிகர்கள் உறைந்துபோயுள்ளனர்.
அவருடன் நடித்த நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என்று பலரும் இணையத்தில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல, இந்திய ரசிகர்களும் திரைக் கலைஞர்களும் அவரது மரணத்தால் அதிர்ச்சியடைந் திருக்கின்றனர். இணையத்தில் பாலிவுட் நட்சத்திரங்களின் ‘ஆர்.ஐ.பி.' அஞ்சலி செய்திகள் நிரம்பிவழிகின்றன.
பொதுவாக, அமெரிக்கர்களின் ரசனைக்கேற்ற வகையில் எடுக்கப்படும் படங்களிலும், உலகமெங்கும் உள்ள பொது ரசிகர்களின் விருப்பத்துக்குரிய படங் களிலும் நடித்து, புகழ்பெற்ற நடிகர்கள் வெகு சிலர்தான். அந்தச் சிறிய பட்டியலில், முக்கிய இடத்தில் ராபின் வில்லியம்ஸ் இருக்கிறார். அவர் நடித்த ‘தி குட்வில் ஹண்டிங்', ‘டெட் பொயெட்ஸ் சொசைட்டி', ‘குட்மார்னிங் வியட்நாம்' போன்ற படங்கள் அமெரிக்க ரசிகர்களையும், ‘ஜுமாஞ்சி', ‘ஃப்ளப்பர்', ‘மிஸஸ். டவுட்ஃபயர்', ‘நைட் அட் தி மியூசியம்' போன்ற படங்கள் உலகெங்கும் உள்ள சாதாரண ரசிகர்களையும் கவர்ந்தவை.
ரிஷிமூலன்
அதேபோல், நகைச்சுவை மிளிரும் பாத்திரங்களிலும், அமைதியான குணம் கொண்ட சாதாரணர்களின் பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்தவர் அவர். அத்துடன், அவர் நடித்த சில படங்கள் தமிழ், இந்தி படங்களின் ரிஷிமூலமாக இருந்தன. குறிப்பாக, அவர் நடித்த ‘மிஸஸ் டவுட்ஃபயர்’ - ‘அவ்வை சண்முகி’யாகவும், ‘பாட்ச் ஆடம்ஸ்’ படம் ‘முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.’ (தமிழில் வசூல்ராஜா) ஆகவும் நம் கண்களுக்குப் பழக்கமானவை.
1951-ல் சிகாகோவில் பிறந்த ராபின், மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்டு நகரப் பள்ளியில் படித்தவர். கிளாரமண்ட் மெக்கென்னா கல்லூரியில் படித்த பின்னர், நியூயார்க்கில் உள்ள ஜுல்லியர்ட் நிகழ்த்துகலைக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர். சூப்பர் மேன் படங்களில் நடித்துப் புகழ்பெற்ற கிறிஸ்டோபர் ரீவ்ஸ், இவரது சக மாணவர். கலிஃபோர்னியாவில் உள்ள மரின் கல்லூரியில் மேடை நாடகப் பயிற்சி பெற்றார் ராபின். 1970-களின் இறுதியில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் புகழ்பெற்றார். வேற்றுக் கிரகத்திலிருந்து பூமிக்கு வரும் மோர்க் என்ற பாத்திரத்தில், அவர் நடித்த ‘ஹேப்பி டேஸ்' தொடர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதே பாத்திரத்தை இன்னும் விஸ்தரித்து, ‘மோர்க் அண்ட் மிண்டி' என்ற தொடர் வெளியானது. ‘கேன் ஐ டூ இட்' (1977) என்ற நகைச்சுவைப் படத்தின் மூலம், ஹாலிவுட்டில் அறிமுகமானார்.
அங்கீகாரமும் விருதுகளும்
1987-ல் ‘குட்மார்னிங் வியட்நாம்' படத்தில், வியட்நாமில் பணிபுரியும் வானொலி அறிவிப்பாளர் பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்தார். ‘குட் மார்னீஈஈஈங்…வியட்நாம்' என்று அவர் பேசுவது போலவே, ‘லகே ரஹோ முன்னாபாய்’ படத்தில் வித்யாபாலன் இழுத்துப் பேசுவார். அந்த வகையில் இந்திய நடிகைகளுக்கும் ‘இன்ஸ்பிரேஷனாக' இருந்திருக்கிறார் ராபின். 'குட்மார்னிங் வியட்நாம்' படத்துக்காக, முதல் கோல்டன் குளோப் விருது பெற்றார். அதே படத்துக்காக, முதல்முறையாக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். ‘டெட் பொயட்’ஸ் சொசைட்டி' படத்தில், ஆங்கில ஆசிரியர் பாத்திரத்தில் சிறப்பாக நடித்தார். அதில், அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனின் ‘ஓ கேப்டன் மை கேப்டன்' என்ற கவிதை வரிகளை மாணவர்களிடம் பேசி அவர்களைக் கவரும் காட்சி வெகு பிரசித்தம். அந்தப் படத்துக்காகவும் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
நடிகர் மேட் டாமனுடன் இணைந்து நடித்த ‘குட் வில் ஹண்டிங்’(1997) படத்துக்காக அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அந்தப் படத்தில், உளவியல் மருத்துவராக மிகச் சிறப்பாக நடித்தார். ‘ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ்', ‘ஹேப்பி ஃபீட்', ‘அலாதீன்' போன்ற படங்களில் பின்னணிக் குரல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார்.
பிரபல கார்ட்டூன் பாத்திரமான ‘பாப்பய்’பாத்திரத்திலும் நடித்தார். அமெரிக்காவின் 26-வது அதிபர் தியடோர் ரூஸ்வெல்ட் பாத்திரத்திலும், ‘நைட் அட் தி மியூசியம்' படத்தில் ‘தி பட்லர்' படத்தில் 36-வது அதிபர் டுவைட் ஐசனோவர் பாத்திரத்திலும் நடித்தது, ராபின் வில்லியம்ஸின் தனிச்சிறப்பு. அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: “நம்மைச் சிரிக்க வைத்தவர்; அழ வைத்தவர். அளவிட முடியாத தனது திறமையைத் தாராளமாக நமக்குத் தந்தவர்”.
- வெ. சந்திரமோகன் | தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
Saturday, 9 August 2014

எபோலா வெடிகுண்டு: எதிர்கொள்ளத் தமிழகம் தயாரா?


எபோலா வைரஸ்

எபோலா வைரஸ்
ஏதோ ஆப்பிரிக்க நாட்டில் பரவும் நோய் என்று அலட்சியமாக நாம் இருந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கும் கட்டுரை.
எபோலா காய்ச்சல்பற்றி பீதி கிளம்பியிருக்கும் வேளையில், முதலில் நம்மில் பலர் நினைப்பது: “அதெல்லாம் ஆப்பிரிக்காவுலேர்ந்து இங்க வராது, வந்தாலும் நாம சமாளிக்க முடியாதா?”
இவை இரண்டுமே தவறான கருத்துகள்.
முதலாவது, கொடிய தொற்றுநோய்கள் ஆப்பிரிக்கா விலிருந்துதான் வர வேண்டும் என்பதில்லை. ஈரான், உக்ரைன், கஜகஸ்தான் போன்ற மருத்துவ உள்கட்டமைப்புகள் குறைந்த நாடுகளிலும் எபோலா போன்ற நோய்கள் தோன்றிப் பரவியுள்ளன. இரண்டா வது, நமது மருத்துவ வசதியெல்லாம் இதுபோன்ற தொற்றுநோய்களை வென்றுவிட முடியாது. எபோலா, கிரிமீயன் காங்கோ ரத்தப்போக்குக் காய்ச்சல் (சி.சிஹெச்.எஃப்), லஸ்ஸா போன்ற சில தொற்றுநோய்களுக்கு இன்று வரை மருந்து இல்லை. அவை, மிக வேகமாகப் பரவக் கூடியவை. இந்தக் கொடூர நோய்களில் ஒன்றான கிரிமீயன் காங்கோ ரத்தப்போக்குக் காய்ச்சல், சமீபத்தில் அகமதாபாதின் அருகே தோன்றியது என்றால், நம்மில் பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
அகமதாபாத் அதிர்ச்சி!
டிசம்பர் 31, 2010 அன்று, அகமதாபாதின் ஷேல்பி மருத்துவமனையில் ஒரு பெண் தீவிரக் காய்ச்சலோடு அனுமதிக்கப்பட்டாள். நான்கு நாட்களாகக் காய்ச்சலும் தலைவலியும் மூச்சுத் திணறலுமாக இருந்த அந்தப் பெண், அதற்கு முன் மற்றொரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்தவள். ஒரு சிகிச்சையும் பயனளிக்காமல் இறந்துபோனாள். 7 நாட்கள் கழித்து, ஷேல்பி மருத்துவமனையின் ஒரு செவிலி, அங்கேயே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தீவிரக் காய்ச்சல், தலைவலி, வாந்தி என அறிகுறிகள் பதிவாயின. இறந்துபோன பெண்ணுக்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் பராமரிப்பு செய்துவந்ததால், மருத்துவர்களுக்குச் சந்தேகம் தோன்ற, அவரது ரத்த மாதிரியை, புணேவில் இருக்கும் தேசிய வைராலஜி ஆய்வகத்துக்கு (என்.ஐ.வி.) அனுப்பி வைத்தனர்.
இந்தியாவில் வைரஸ் குறித்த ஆய்வுகளில் என்.ஐ.வி. முதலிடம் வகிக்கிறது. சமீபத்தில் அதற்கு உயிரிய பாதுகாப்பு நிலை 4 என்ற அந்தஸ்து வழங்கப் பட்டிருக்கிறது. உலகிலேயே மிகக் குறைவான ஆய்வகங்களே இந்த அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றன. அவற்றில் , மிக அபாயகரமான தொற்றுநோய்க் கிருமிகள் பராமரிக்கப்பட்டும் வளர்க்கப்பட்டும் ஆய்வுகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. பெரியம்மை, எபோலா, சி.சி.ஹெச்.எஃப்., லிஸ்ஸா போன்ற தொற்றுநோய்களை உருவாக்கும் கொடிய நுண்ணுயிரிகள் இங்கு பாது காப்பாக வைக்கப்படுகின்றன. அத்துடன், எங் காவது இந்த நோய்கள் தோன்றினால், அவற்றை மரபணுரீதியாகக் கண்டறியும் ஆர்.டி. பி.சி.ஆர். போன்ற நவீனக் கருவிகள் இந்த ஆய்வகங்களில் இருக்கின்றன. ஆய்வக அறிக்கையின்படி, நாட்டின் பிற ஆய்வகங்களும், மருத்துவ, சுகாதார நிலையங்களும் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்.
தொடர் மரணங்கள்
என்.ஐ.வி., அந்தச் செவிலியின் ரத்த மாதிரியின் சி.சி.ஹெச்.எஃப். வைரஸ் இருப்பதை மரபணு ஆய்வில் கண்டறிந்தது. ஷேல்பி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டார். உடலின் ஒவ்வொரு துவாரத்திலும் ரத்தம் கசிய, அவரும் எந்த சிகிச்சையும் பயனளிக்காது ஐந்தாம் நாளில் இறந்துபோனார். முதலாவதாக இறந்த பெண்ணுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணித்த இளம் மருத்துவர் ஒருவர், மற்றொரு மருத்துவமனையில், அவள் இறந்த 7 நாட்களில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கும் அதே அறிகுறிகள். எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் அவரும் மிகுந்த வலியுடன், ரத்தக்கசிவில், உள்உறுப்புகள் சிதைந்த நிலையில் மரணமடைந்தார். தொற்றுநோய் சந்தேகம் வராததாலும், தகவல் பரிமாறப்படாததாலும் அவரது ரத்த மாதிரிகள் ஆராயப்படவில்லை. இதே நேரத்தில் மற்றொரு ஆண், காய்ச்சல், உடல் வலி, பேதியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நோய் அறிகுறிகள், ரத்தக்கசிவு போன்றவற்றைக் கண்டு எச்சரிக்கையான மருத்துவர்கள், அவரது வீட்டு நிலையை ஆராய்ந்தனர். அவரது மனைவி 9 நாட் களுக்கு முன்புதான் பெயர் அறியாத ரத்தப்போக்குக் காய்ச்சலால் மரணமடைந்திருந்தார். அந்தப் பெண் ணுக்குப் பணிவிடை செய்த செவிலி ஒருவரும், மற்றொரு மருத்துவமனையில் ரத்தப்போக்குக் காய்ச்சலில் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரியவர, அவரையும் உடனடியாகத் தனி அறையில் வைத்துத் தீவிர சிகிச்சையைத் தொடங்கினார்கள். அவரது ரத்த மாதிரியை என்.ஐ.வி. பரிசோதித்து சி.சி.ஹெச்.வி இருப்பதாக உறுதிப்படுத்தியது. அவருக்கு ரிபாவிரின் என்ற மருந்து கொடுக்கப்பட்டு, பல நாட்களுக்குப் பிறகு அவர் உடல்நலம் தேறினார். அந்தச் செவிலியோ சிகிச்சை பலனளிக்காமல், பரிதாபமாக இறந்துபோனார்.
கால்நடை உண்ணிகள்
குஜராத் அரசுக்கு இந்த நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டு, மாநிலத் தொற்றுநோய் மையம் முடுக்கிவிடப்பட்டது. சி.சி.ஹெச்.எஃப். நோய், பொதுவாக உண்ணிகள் மூலம் பரவுகிறது. கால்நடை உண்ணிகள் இந்த வைரஸின் தாங்கிகள். அந்த உண்ணிகள் மனிதர்களைக் கடிப்பதன் மூலம் இவை மனிதர்களுக்குப் பரவுகின்றன.
முதலில் இறந்துபோன பெண்ணின் வரலாற்றை ஆராய்ந்த அரசு அதிகாரிகள், அவள் சானந்த் என்ற இடத்தினருகே ஒரு கிராமத்திலிருந்து வந்தவள் எனவும், ஆடு மாடு மேய்ப்பில் ஈடுபட்டிருந்தவள் எனவும் அறிந்தனர். அங்கு உண்ணிகள் பரவுவதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், மாநில அளவிலும், தேச அளவிலும் எச்சரிக்கை விடுக் கப்படவில்லை. அதற்குப் பின் வேறு நிகழ்வுகள் நடந்த தாகத் தெரியவில்லை.
ஒரு வருடம் கழித்து, 2012 மே மாதம், மற்றொரு மருத்துவர், அகமதாபாதின் வாடிலால் மருத்துவ மனையில், இதே அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு, தீவிரச் சிகிச்சைக்குப் பின் உயிரிழந்தார். மருத்துவர்கள் ஆராய்ந்தபோது, பத்து நாட்களுக்கு முன், அகமதாபாதை அடுத்த பாவ்லா கிராமத்திலிருந்து அதீதக் காய்ச்சல், ரத்தக்கசிவுடன் வந்த ஒரு பெண்ணுக்கு அவர் மருத்துவம் செய்திருக்கிறார் என்பதும், அவள் மூச்சுத் திணறியபோது, வாயில் குழாய் இட்டபோது ரத்தம் பீய்ச்சியடித்து அவரது கண்களில் தெறித்தது எனவும் அறிந்தனர். கண்களின் வழியே அந்த வைரஸ் அவருக்குள் புகுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவர் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் அந்தப் பெண்ணும் மரணமடைந்திருந்தாள்.
குஜராத் தொற்றுநோய்ப் பிரிவு மையத்தினரும், மாநில சுகாதார அதிகாரிகளும் பாவ்லா கிராமத்தில் மிகுந்த பாதுகாப்புடன், அங்கு தொழுவத்தில் இருந்த கால்நடைகளின் ரத்த மாதிரிகளையும் உண்ணிகளையும் சேகரித்து என்.ஐ.வி-க்கு அனுப்பிவைத்தனர். அவற்றை ஆராய்ந்த என்.ஐ.வி. ஒரு கன்றின் ரத்தத்திலும், சில உண்ணிகளிலும் சி.சி.ஹெச்.எஃப். நுண்ணுயிரி இருப்பதாகக் கண்டறிந்தது.
எங்கிருந்து?
எங்கிருந்து இந்த வைரஸ் வந்திருக்கக் கூடும்? 90-களில் பாகிஸ்தானில் சி.சி.ஹெச்.எஃப். பரவியது. அங்கிருந்து உண்ணிகள் காற்றிலோ, கால்நடைகள் மூலமாகவோ எல்லைப் பகுதிகள் வழியாக வந்திருக்கக் கூடும் என்று ஊகிக்கிறார்கள். 1940-களுக்கு முன்பே ஜம்மு காஷ்மீரிலும் தென்னக மாநிலங்களிலும் சி.சி.ஹெச்.எஃப். இருந்ததாக ஆவணப்படுத்தப்படாத தகவல்கள் உள்ளன. சி.சி.ஹெச்.எஃப். எப்படி இந் நாட்டில் வந்தது என்பது புதிராகவே உள்ளது, அந்தக் காய்ச்சல்போலவே.
சி.சி.ஹெச்.எஃப். நோய்ப் பரவலைத் தடுக்க, குஜராத் மாநிலம் மேற்கொண்ட முயற்சிகள் ஆரம்ப நிலையிலானவை. பெரிய அளவில் அது பரவியிருந்தால், அந்த நடவடிக்கைகள் போதாது.
இந்தியாவில் எத்தனை மாநிலங்களின் தொற்று நோய்ப் பிரிவுகள் இந்த அபாயத்தின் தீவிரத்தை உணர்ந்திருக்கின்றன என்பது தெரியவில்லை. அப்படி உணர்ந்த மாநிலங்களில், மிக வேகமாகப் பரவும் இந்தத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த எந்த அளவுக்கு முன் தயாரிப்புடன் இருக்கின்றன என்பது தெரியவில்லை (கர்நாடகம் மட்டுமே தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் உள்கட்டமைப்பிலும் செயல்பாட்டிலும் முன்னணியில் இருக்கிறது). ஒருங்கிணைந்த தகவல்தொடர்பையும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வழிமுறைகளையும், பேரிடர் தடுப்புக் காப்பு முறைகளையும் மாநில அரசுகள் முக்கியமாகக் கருதிச் செயல்படுத்தும்வரை… நாம் ஒரு தீப்பற்றிய வெடிகுண்டின் மேல்தான் இருக்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம்!
- சுதாகர் கஸ்தூரி, அறிவியல் கருவிகள் மற்றும் மென்பொருட்கள் தொடர்பான தொழில்நுட்ப ஆலோசகர், ‘6174' என்னும் அறிவியல் புனைகதை நாவலின் ஆசிரியர்,
தொடர்புக்கு: kasturi.sudhakar@gmail.com

சன்னி லியோன்: இந்திய ரசிகர்களின் மேன்மையும் கீழ்மையும்!


நடிகை சன்னி லியோன் | கோப்புப் படம்: ஏ.பி.அவள் அவ்வளவு அழகு. அந்த அழகு என்னை சலனப்படுத்தவில்லை என்று எந்த ஓர் ஆண்மகன் சொன்னாலும்கூட அவரது கண்கள் காட்டிக் கொடுத்துவிடும், அது பொய் என்பதை. அத்தகைய திமிரான அழகுக்காரி கரன் மல்ஹோத்ரா. ஆனால், அவரை சன்னி லியோன் என்றால்தான் அனைவருக்கும் தெரியும்.
சன்னி, அவராக வைத்துக்கொண்ட பெயர். லியோன், அவர் மாடல் அழகியாக சேர்ந்த பெண்ட் ஹவுஸ் இதழின் ஆசிரியர் வைத்தது. அழகும், நடிப்புத் திறமையும் இருந்தும் சன்னி லியோன் ஏன் போர்னோகிராபியை தன் தொழிலாக தேர்ந்தெடுக்க வேண்டும்?!
அது ஆச்சர்யம் நிரம்பிய கேள்வியாகவே இருந்துவிட்டு போகட்டும். ஏனென்றால் அதை நியாயப்படுத்துவதோ, மறுத்தலிப்பதோ இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. "வாழ்க்கையில் நம் முன் தோன்றும் வாய்ப்புகளே நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. என் முன் பள்ளிக்கூடம், $100,000 என்ற இரண்டு வாய்ப்புகள் இருந்தன. நான் சில காரணங்களுக்காக இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தேன். ஆனாலும் என் பெற்றோர்கள் என்னை வெறுக்கவில்லை. நான் தேர்ந்தெடுத்த பாதையை மதித்தனர். ஆனால் எப்போதும் அதைப்பற்றி நாங்கள் பேசியதில்லை" என சன்னி லியோன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
முழுநேர போர்னோகிராபியில் இருந்த போது சன்னி லியோன் எவ்வளவு பிரபலமாக இருந்தாரோ, அதே அளவு அவருக்கு பாலிவுட் சினிமாவும், ரியாலிட்டி ஷோக்களும் வரவேற்பை தந்திருக்கின்றன. ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டாலும்கூட அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஏன், தமிழில் சமீபத்தில் வெளியான 'வடகறி' படத்தில்கூட சன்னி லியோன் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார் என்பது ஒருவகையில் படத்திற்கான புரொமோஷனாகவே முன்வைக்கப்பட்டது.
உலகில் ஒரு போர்னோகிராபி ஸ்டாரை வைத்து ஒரு கேம் அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால், அது சன்னி லியோனுக்கு மட்டுமே. அவரது கணவர் டேனியல் வெப்பருடன் இணைந்து ஆரம்பித்த போர்னோகிராபி இணையதள தொழிலும் அவருக்கு லாபகரமாகவே இருந்து வருகிறது.
ஒரே நபர் எப்படி பிரபலமாகவும் அதே வேளையில் மிகவும் கீழ்த்தரமான சித்தரிப்புக்கு கருவாகவும் இருக்க முடியும்? இந்த பிராண்டிங் எப்படி சாத்தியமாயிற்று என்பதே இங்கே விவாதப்பொருள்.
அண்மையில் நடந்த ஒரு சர்ச்சையை இதற்கு எடுத்துக்காட்டாக வைத்துக்கொள்வோம். திடீரென பேஸ்புக், ட்விட்டர் சமூக வலைதளங்களில் சன்னி லியோன், அமீர் கான் இருவரும் டிரெண்டிங்கில் இருந்தனர். என்னவென்று பார்த்தால், அமீர் கான் தனது புதிய படத்தின் புரொமோஷனுக்காக கிட்டத்தட்ட முழு நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்த போஸ்டர் வெளியாகியிருந்தது. அதை வைத்துக் கொண்டு சமூக வலைதள வித்தகர்கள் சன்னி லியோனையும் - அமீர் கானையும் ஒப்பிட்டு கருத்துகளை பதிவேற்றிக் கொண்டிருந்ததே டிரெண்டிங்குக்கு காரணம் எனத் தெரியவந்தது.
ஒரே ஒரு பதிவு இங்கே உங்களுக்காக "சன்னி லியோன் ஆடைகளை அணிந்து கொள்கிறார், அவரை நடிகையாக புரமோஷன் செய்து கொள்வதற்காக... ஆனால், அமீர் கான் ஆடைகளை அவிழ்த்திருக்கிறார் தனது புரோமஷனுக்காக." இது உண்மைதானே, இதில் என்ன இருக்கிறது என்று தோன்றும். ஆனால், போர்ன் ஸ்டாரில் இருந்து சினிமா ஸ்டார் என்ற 360 டிகிரி மாற்றம் கண்டுள்ள சன்னி லியோன் மீதான கண்ணோட்டம் எத்தகையது என்ற கேள்வியைத் தூண்டுகிறது.
ஒரு போர்ன் ஸ்டார் திரைப்பட வாய்ப்புகளுக்காக, நல்ல லீட் ரோல்களுக்காக முனைப்பு காட்டுவது, கூடாத லட்சியமா என்ன?
ஒற்றைப் பாடலுக்கு மட்டும் ஆட்டம் போட பாலிவுட் முன்னணி இயக்குநர் ராம் கோபால் வர்மா அழைப்புவிடுத்த போது எனக்கு லீட் ரோல் தந்தால் நடிக்கிறேன் என துணிச்சலாக சொன்னவரே சன்னி லியோன். தன்னை, முன்னணி நாயகியாக்கிக் கொள்ள அவர் எடுக்கும் முயற்சிகள் நியாயமானதே.
ஆனால், 80-களில் தமிழ் திரையுலகில் சில்க் ஸ்மிதா கோலோச்சியபோது அவரை பின்னுக்குத்தள்ள பின்னப்பட்ட வலைகள் மிக வலிமையானவை. அந்த டர்ட்டி பிக்சரை, யாராவது மறுக்க முடியுமா என்ன? இந்தச் சமூகத்தில் அப்படி ஒரு டர்ட்டி பிக்சர் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
போர்னோ துறையின் சவால்களை தெரிந்தே அதை ஏற்றுக்கொண்ட சன்னி, அதே போல் நடிகையாக வேண்டும் என்பதையும் முழு விருப்பதோடு, உறுதியோடு மேற்கொண்டிருக்கிறார்.
கிரிமினல் பின்னணி உள்ளவர்கள் அரசியலில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர். குற்றச்சாட்டுகள் நிரூபணமாகாத ஒரே காரணத்தால் திருவாளர் பரிசுத்தமாக உலா வருகின்றனர் பலர். ஆனால், என் தொழில் இதுவாகத்தான் இருந்தது. இப்போது அதை மாற்றிக் கொண்டுள்ளேன் என்ற போர்னோ நடிகையை மட்டும் நீசமாக பார்ப்பதற்கு, சமுதாயத்தின் கறை படிந்த கண்ணோட்டமே காரணம் என்று சொல்வதா? இல்லை பெண் என்பதாலே இந்தப் பார்வை என்று சொல்வதா?
இந்த இடத்தில் இந்தியத் திரைப்பட படைப்பாளிகள், ரசிகர்களிடம் இருந்த மேன்மையான அணுகுமுறையைப் பதிவு செய்தே ஆகவேண்டும்.
பெருவாரியான ரசிகர்களை இலக்காகக் கொண்டு எடுக்கப்படும் தங்களது படங்களில், போர்னோ ஸ்டார் என்ற முத்திரையுடன் இருக்கும் நடிகைக்கு தைரியமாக வாய்ப்புத் தரும் விதத்தில் இந்திய சினிமா படைப்பாளிகள் மெச்சத் தகுந்தவர்களாகிறார்கள்.
அதேவேளையில், பண்பாட்டுப் பின்னணியை முன்னிறுத்திக்கொள்ளாமல், மெயின் ஸ்ட்ரீமுக்கு வந்த போர்னோ நடிகையை ஒரு கலைஞராக ஏற்றுக்கொள்ளும் இந்திய ரசிகர்களின் மனப்பக்குவமும் போற்றுதலுக்கு உரியது. ஆனால், இது எந்த அளவுக்குப் போற்றப்பட வேண்டியது என்ற கேள்வி எழுகிறது. கடந்த சில மாதங்களாகவே ட்விட்டர் தளத்தை உன்னிப்பாக கவனித்து வருபவர்களுக்கு இந்தக் கேள்வி நிச்சயம் எழலாம்.
எப்போதெல்லாம் இணையத்தில் பேசுபொருளில் வறட்சி ஏற்படுகிறதோ, சர்ச்சைக்குரிய விவாதத்துக்குரிய நிகழ்வுகள் ஏதும் இல்லையோ, அப்போதெல்லாம் சன்னி லியோன் என்ற பெயர் ட்ரெண்டிங்கில் வருவதை ட்விட்டரில் காண முடிந்தது. அது, சமகால வழக்குத் தமிழில் சொல்ல வேண்டுமென்றால், சன்னி லியோன் குறித்து பெரும்பாலான பதிவுகள் 'கலாய்ப்பு' வகையறாவைச் சேர்ந்தவை.
இது என் எப்படி இருக்கிறது தெரியுமா?
ஒரு சமூகப் புரட்சியாளர் தன்னை புரட்சியாளராகக் காட்டிக் கொள்வதற்காக ஒரு பாலியல் தொழிலாளியை மனமுவந்து திருமணம் செய்துகொண்டு, அந்தப் பெண்ணுக்கு இயல்பு வாழ்க்கையைக் கொடுப்பதாகக் கூறி, அவ்வப்போது அவளது முந்தையத் தொழிலை மேற்கோள்கோட்டி குத்திக்காட்டுவதற்கு ஒப்பானதாகவே சன்னி லியோன் மீதான தாக்குதல்களைப் பார்க்கிறேன்.
பாரதி ஆனந்த் - தொடர்புக்கு bharathipttv@gmail.com

சூரியனோடு போய்... குபேரனோடு திரும்பி...




செல்வம் எப்படியெல்லாம் பயணம் செய்து, எப்படியெல்லாம் திரும்பிவருகிறது!
‘செல்வ நிர்வாகம்’ என்று சொல்லிப்பாருங்கள். ‘வந்தேன் ஐயா’ என்று விரைந்து வந்து நிற்காத வங்கியாளர்கள் அபூர்வமாகவே இருப்பார்கள். வட்டிக்குக் கடன் தராமலேயே வங்கி வருமானத்தை அதிகப்படுத்த வழி செய்யும் வங்கித் துறை இது. பெரும் பணக்காரர்களின் வகைதொகை இல்லாத செல்வத்தை, வகுத்துத் தொகுத்துப் பெருக்க உதவிசெய்வது செல்வ நிர்வாகம் (வெல்த் மேனேஜ்மென்ட்). “செல்வம் முதலில் வரட்டும், அப்புறம் நிர்வகிக்கலாம்” என்கிறீர்களா? இருக்கும் சேமிப்பைக் கொண்டு திட்டமிடவும் இது உதவும்.
எல்லாப் பணக்காரர்களும் ஒரே மாதிரி இல்லை. நிகர மதிப்புப்படி நிலை நிர்ணயமாகும். 10 கோடி சொத்தும், ஒரு கோடி கடனும் இருக்கும் ஒருவரின் நிகர மதிப்பு 9 கோடி(10 - 1). ஒரு மில்லியன் டாலர் நிகர மதிப்பு உள்ளவர் கள் சாதா பணக்காரர்கள். ஐந்து மில்லியன் நிகர மதிப்பு உள்ளவர்கள் அதிபணக்காரர்கள். அதற்கு மேல் மதிப்பு உள்ள சீமான்கள் ‘செல்வ சூப்பர் ஸ்டார்கள்'.
செல்வத் தொகுப்பு
செல்வத்தோடு தொடர்புடையது ‘போர்ட்போலியோ' என்ற செல்வத் தொகுப்பு. 10 கோடி ரூபாய் ஒருவரின் நிகர மதிப்பு என்றால், அந்த 10 கோடியும் கரன்சி நோட்டுகளாக அவருடைய படுக்கையில் பரத்தி வைக்கப்படுவதில்லை. அதில் 2 கோடி மாளிகையாகவும், 2 கோடி கம்பெனி பங்குகளிலும், ஒரு கோடி வங்கி சேமிப்பிலும், 3 கோடி தங்கமாகவும், 2 கோடி வைர நகைகளாகவும் இருக்கலாம். இப்படிப் பலவிதமான சொத்துக்களின் தொகுதியே ‘போர்ட்போலியோ'.
‘செல்வம் இருக்கிறது. அது அள்ள அள்ளக் குறையாமல் வளர வழிசெய்ய வேண்டும். அதற்கு அனுபவமும் இல்லை. நேரமும் இல்லை.' இப்படியான பிரச்சினைகளோடு இருக்கும் பணம் படைத்தவர்களுக்கு ‘கவலையை விடுங்கள்' என்று கணினி மென்பொருள் அடிப்படையிலான செல்வ நிர்வாகத் திட்டங்களை வங்கிகள் அளிக்கின்றன.
அடிப்படைத் திட்டம், ஆலோசனை கூறுவதோடு முடியும். ‘இப்போது தங்கம் விலை குறைந்திருப்பதால், சேமிப்புக் கணக்கில் இருக்கும் அதிகபட்சப் பணத்தைக் கொண்டு தங்கத்தில் முதலீடு செய்யலாம்’ என்பது போலவோ, ‘பங்குச் சந்தை சரிந்துவருகிறது. விரைவில் அதிபாதாளத்துக்குப் போகலாம். அதற்குள் உங்களிடம் உள்ள பங்குகளை விற்றுவிடுங்கள்’ என்பது போலவோ அறிவுரை சொல்வது இது. சொன்ன அறிவுரைக்கு வங்கிக்குக் கட்டணம் கிடைக்கும்.
பங்குச் சந்தை சரியுமா, தங்கம் விலை ஏறுமா என்ற ஊகங்களை உலக நிலவரத்திலிருந்தும் பெருந் தகவலிலிருந்தும் எடுத்து ஆராய்ந்து ஆலோசனை தரக் கணினி அமைப்பு உதவும்.
செல்வர் சொல்வார், வங்கி செய்யும்!
இரண்டாம் கட்ட செல்வ நிர்வாகத்தில் என்ன முதலீடு, எவ்வளவு வேண்டும் என்று செல்வர் சொல்வார், வங்கி செய்யும். பங்குச் சந்தையில் வாங்க, விற்க தனியார் இடைத் தரகர்கள் ஆற்றிவந்த சேவையைத் தற்போது வங்கிகளும் வழங்குகின்றன. இதேபோல் தங்கம் வாங்கு தல், விற்றல் போன்ற பணிகளுக்கும் வங்கியின் கணினி அமைப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். வங்கிக்குக் கணிசமான தொகை கட்டண வருமானமாக வரும்.
இறுதிக்கட்ட செல்வ நிர்வாகம் மொத்த ‘போர்ட் போலியோ நிர்வாகம்' ஆகும். கோடீஸ்வர வாடிக்கை யாளர், தன் சொத்துத் தொகுதி முழுவதையும் தொடர்ந்து மாற்றியமைக்க வங்கிக்கு அதிகாரம் வழங்குவார். சொத்து விற்க, புதிதாக வாங்க, முதலீடு செய்ய என வங்கி, அவர் சார்பில் ஊக்கத்துடன் செயல்படும். வாடிக்கையாளரின் சொத்துக்கள் உலகம் முழுவதும் வங்கியின் பாதுகாப்பு நிர்வாகத்தில் (கஸ்டோடியல் மேனேஜ்மென்ட்) இருக்கும். வங்கியின் செல்வ நிர்வாக நடவடிக்கைகளால் வாடிக்கையாளரின் மொத்தச் சொத்து மதிப்பு உயரும்.
செல்வத்தின் பயணம்
இத்தாலியில் ரோம் நகரில் தங்கம் விலை உயர்ந்திருக்கிறது, ஜப்பான் டோக்கியோவில் மின்னியல் நிறுவனப் பங்குகள் அடுத்த வாரம் விலை குறைந்து பின் உயரலாம். இது செல்வ நிர்வாகக் கணினி அமைப்பு மூலம் வங்கி பெறும் தகவல் என்று வைத்துக்கொள்வோம். கணினி ஆலோசனைப்படி வாடிக்கையாளர் கணக்கில் உள்ள தங்கம், இத்தாலிய சந்தையில் விற்கப்படும். அங்கே புழக்கத்தில் உள்ள யூரோ நாணய மதிப்பில், விற்றுவந்த தொகை தற்காலிகமாக அமெரிக்கக் கிளையில் டாலர் மதிப்பில் வரவு வைக்கப்படும். நாலு நாள் கழித்து, டாலர் ஜப்பானிய யென் நாணயமாக மாற்றப்பட்டு, வங்கியின் டோக்கியோ கிளையால் டோக்கியோ பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும். அந்தப் பங்குகள் மின் உருவில் (டிமேட்) டோக்கியோ கிளையில் வரவு வைக்கப்படும். நிமிடத்துக்கு நிமிடம் மாறும் உலகப் பொருளாதார நிலையைக் கணக்கில் கொண்டு தகவல் திரட்டி ஆய்வுசெய்து, சர்வதேச அளவில் செல்வ நிர்வாகம் செய்ய கணினி அமைப்பு வழிசெய்யும்.
இந்த அமைப்புகள் வாடிக்கையாளரின் குணநலன் களையும், நம்பிக்கைகளையும் கணக்கில் கொண்டு முடிவெடுக்கும். இறைச்சி உண்பதைப் பாவமாக நினைக்கும் அல்லது புகைபிடிப்பதை அறவே வெறுக்கும் தகவல்கள் வாடிக்கையாளரிடமிருந்து முன்கூட்டியே பெறப்படும். வங்கி அவருடைய செல்வத்தை முதலீடு செய்யும்போது இறைச்சி பதப்படுத்தி விற்கும் தொழிலிலோ, சிகரெட் உற்பத்தி போன்ற தொழில்களிலோ முதலீடு செய்யாது.
செல்வ நிர்வாகத்தில் புதிய அம்சம்தான் விருப்ப முதலீடு. நவீன ஓவியத்தில் ஈடுபாடு கொண்ட வாடிக்கையாளர், நன்கு அறியப்பட்ட அல்லது பிரபலமாகிக்கொண்டிருக்கும் ஓவியர் வரைந்த சித்திரங் களில் முதலீடு செய்ய அக்கறை காட்டக் கூடும். ஓவியங்கள் கணிசமான விலையில் மேல்நாடுகளில் விற்பனையாவதால், அவற்றில் முதலீடு செய்ய ஓவியம்பற்றி அதிகம் தெரியாதவர்களும் அக்கறை காட்டுகிறார்கள். செல்வ நிர்வாக அமைப்போடு தொடர் புடைய தகவல் அமைப்புகள், உலக ஓவியச் சூழலைக் கைதேர்ந்த ரசிகர்போல் ஆராயும். இந்தத் தகவல்களின் அடிப்படையில் ஓவியம்பற்றித் தெரிந்த வங்கி அதிகாரி வாடிக்கையாளருக்கு முதலீட்டு ஆலோசனை தருவார்.
செல்வம் உதிக்கும் திசை
நீங்கள் தூங்கும்போதும் உங்கள் பணம் தூங்காமல் இருக்க செல்வ நிர்வாகம் உதவ முடியும். உலகில் முதலில் சூரியன் உதிப்பது நியூஸிலாந்தில். அங்கே காலை 9 மணி ஆகும்போது, அமெரிக்காவில் முந்தைய தினம் மாலை 5 மணியாக இருக்கலாம். வாடிக்கையாளரின் அமெரிக்க வங்கிக் கணக்கில் இருந்து டாலர் தொகை அந்த மாலை நேரத்தில் நியூஸிலாந்து பறக்கும். காலை நேர வரவாக அங்கே பதிவாகி ஒரு நாள் வட்டி ஈட்டும். நியூஸிலாந்தில் மாலை மங்கும்போது அமெரிக்காவில் மறுநாள் உதயம். பணம் அமெரிக்கா திரும்பும். செல்வ நிர்வாகத்தில் சூரியன் மறைவதே இல்லை.
- இரா. முருகன், ‘விஸ்வரூபம்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்,
தொடர்புக்கு: eramurukan@gmail.com

பன்னாட்டு நிறுவனங்கள்தான் வளர்ச்சிக்கு அடிப்படையா?



வங்கி வட்டிவீதங்கள் இப்போது அதிகம் என்றாலும், இன்னும் சில மாதங்களுக்கு இப்படித்தான் தொடரும் என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கையிலிருந்து தெரிகிறது.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நிதிக்கொள்கையை மறுபரிசீலனை செய்யும் ரிசர்வ் வங்கி, 2014-15-ம் ஆண்டுக்கென மூன்றாவது முறையாகப் பரிசீலித்த பிறகு, வட்டிவீதத்தைக் குறைக்க வேண்டாம் என்று முடிவுசெய்திருக்கிறது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் குறுகிய காலக் கடனுக்கான வட்டியையும் (ரெபோ ரேட்), ரொக்கக் கையிருப்பு வீதத்தையும் மாற்றப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளது. அதே சமயம், வங்கிகள் சட்டபூர்வமாக வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு (எஸ்.எல்.ஆர்.) 0.5% குறைக்கப்பட்டிருக்கிறது.
நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு ஏற்பட்டதும், பொருளாதாரத் துறையில் மீட்சி ஏற்படும், வளர்ச்சிக்குத் தடையாக உள்ள அம்சங்கள் படிப்படியாக விலக்கப்படும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. நான்கு மாதங்களுக்கு முன்னால் பொதுத் தேர்தல் சமயத்தில் ரிசர்வ் வங்கி எச்சரிக்கையாக இருந்தது நியாயமே. இப்போது ஏன் தயங்க வேண்டும்? ஜேட்லியின் நிதிநிலை அறிக்கை, முந்தைய அரசின் அடியொற்றியே இருந்தது. தொழில், வர்த்தகத் துறையினர் அச்சப்படும் எந்த அம்சமும் அதில் இல்லை. அதையே தூண்டுகோலாகக் கொண்டு ரிசர்வ் வங்கியும் துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க இதுவே உற்ற தருணம்.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் முந்தைய அரசால் நியமிக்கப்பட்டவர் என்றாலும் அவருடைய அனுபவம், திறமை, தகுதி காரணமாக அவரையே தொடர்ந்து நீடிக்க அனுமதித்துள்ளனர். அத்துடன் இன்றைய பொருளாதார நிலைமையில், முந்தைய அரசின் கொள்கைகளிலிருந்தும் பாதையிலிருந்தும் உடனே விலகிச் செல்வது அவசியமில்லை என்று புதிய அரசு கருதுவதையே இந்தக் கொள்கை முடிவுகள் தெரிவிக்கின்றன.
வங்கிகளுக்குத் தரும் கடன்கள் மீதான ரெபோ வட்டி வீதத்தைவிட, உண்மையான பொருளாதாரக் காரணிகளையே கணித்து அடுத்த நடவடிக்கைகளை எடுக்க விரும்புவதாக ரகுராம் ராஜன் கூறியிருப்பது வரவேற்கத் தக்கது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் 5.5% ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது. மத்திய அரசின் நிதிக் கொள்கையும் பொருளாதாரக் கொள்கையும் வளர்ச்சியைச் சார்ந்ததாகவே இருந்தாலும், வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் அம்சங்கள் இன்னும் முழுதாக நீக்கப்படவில்லை. அதில் கவனம் செலுத்தினால் இந்த நிதியாண்டைச் சிக்கலின்றி கடந்துவிடலாம்.
பொருளாதார வளர்ச்சிக்காகத் தனியார் துறைக்கு மேலும்மேலும் சலுகைகள் அளிப்பதால் அதிக அளவில் பலன்கள் கிட்டிவிடாது. அதைவிட, பொதுத்துறை நிறுவனங்கள் மீது அரசு அதிகக் கவனம் செலுத்தினாலே பெரும் முன்னேற்றம் ஏற்படும். கூடவே, சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு ஊக்குவிப்பை ஏற்படுத்தலாம். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் தனிக்கவனம் செலுத்தி முதலீட்டைப் பெருக்கினால், வேலைவாய்ப்பும் வளர்ச்சியும் குறுகிய காலத்திலேயே பெருகிவிடும் என்பதையும், வளர்ச்சிக்காகப் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களை மட்டும் சார்ந்திருப்பது பொருளாதாரத்தைப் படுகுழியில் தள்ளிவிடும் என்பதையும் அரசு நினைவில் கொண்டாலே போதும்.

கடல்புறத்தில் ஒரு பெண்...


கடல்புறத்தில் ஒரு பெண்...

ஒரு இளம்பெண். கல்யாணமாகி மூன்று ஆண்டுகள். இரண்டு குழந்தைகள். இரண்டு வயதில் ஒன்று, ஒரு வயதில் ஒன்று. ஒரு நாள் கடலுக்குப் போன கணவன் திரும்பவில்லை. ஊர் தேடிப் போனது. ஆள் கிடைக்கவில்லை. ஒரு வாரம் கழித்துக் கடலோரப் பாதுகாப்புப் படையும் காவல் துறையும் பக்கத்து ஊரில் கரை ஒதுங்கிய ஒரு உடலைக் காட்டுகிறார்கள். உடல் என்று அதைச் சொல்ல முடியுமா? மீன் தின்ற மிச்சம். நீரில் ஊறி வெடித்த பிண்டத்தின் எச்சம். உயிர் உடைந்து, கதறித் துடிப்பவள் அப்படியே உறைந்து சரிகிறாள் சுவரோரம். சோறு இல்லை, தூக்கம் இல்லை. பித்துப் பிடித்தவளாய் உறைந்திருக்கிறாள்.
கடல்புறத்தில் ஒரு பெண் தனித்துப் பிழைப்பது அத்தனை எளிதல்ல. ஒரு ஆண் தினமும் கடலோடும்போதே, பெண் வீட்டு வேலையோடு ஆயிரம் கரை வேலைகளையும் சேர்த்துப் பார்த்தால்தான் ஜீவனம் சாத்தியம். இந்த நடைப்பிணம் இனி என்ன செய்யும் என்று ஊரும் குடும்பமும் கூடிப் பேசுகிறது. அவளை நோக்கி, கடல் கொன்றவனின் தம்பியைக் கை காட்டுகிறது. உடனிருக்கும் இரண்டு உயிர்களைக் காட்டி வற்புறுத்துகிறது. உலுக்குகின்றன பிள்ளைகளின் பார்வைகள். அவள் கரம் பிடிக்கிறாள். ஓராண்டு ஓடுகிறது. இப்போது இன்னொரு பிள்ளை அந்தக் குடும்பத்தில்.
மேலும் ஓராண்டு ஆகிறது. கடலுக்குச் சென்றவனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். வீடு திரும்புகிறான் அவன். அதிர்ந்துபோகிறாள். வீடு திரும்பியவன் பிந்தையவன் அல்ல; முந்தையவன். எவன் செத்தவன் என்று ஊர் நினைத்து எரித்ததோ அவன். கொஞ்ச நேரத்தில் பிந்தையவன் வருகிறான். மூவரும் வாய் பொத்தி நிற்கிறார்கள். மூவரின் முன்னே மூன்று குழந்தைகள். முடிவெடுக்க வேண்டியவள் அவள். இப்போது அவள் என்ன செய்வாள்?
கடல்புறத்தில் ஆயிரம் கதைகள் கிடக்கின்றன இப்படி. இந்த ஒரு கதை போதும் என்று நினைக்கிறேன் ஒரு கடல் சமூகப் பெண்ணின் வாழ்க்கைப் பாட்டைச் சொல்ல!
மனதுக்குள் கடலைச் சுமப்பவள்
ஒரு கடல் சமூக ஆணுக்கு, கடலில் போராடுவது வாழ்க்கைப்பாடு என்றால், கரையில் ஆயிரமாயிரம் வேலைகளோடு, மனதில் கடலையும் அதில் தன் வீட்டு ஆணையும், அவனுடைய போராட்டத்தையும் சுமந்து போராடும் பாடு கடல் சமூகப் பெண்ணுடையது. ஒவ்வொரு கடல் சமூகப் பெண்ணும் கடக்க வேண்டிய பாதையை ரோஸம்மாவும் மேரியம்மாவும் சொன்னார்கள்.
வலி பழகல்
“கடக்கரையில பொறக்குற ஒரு பொட்டப்புள்ளைக்கு வெவரம் தெரியிற வயசுலயே வலி பழக்கணும்னு சொல்லுவாங்க. வலி பழக்கணும்னா என்ன அர்த்தமுண்டா, உங்களை அடிச்சாலும் வலி தெரியக் கூடாது. நீங்க தடுக்கி வுழுந்து புண்ணு பட்டாலும் வலி தெரியக் கூடாது. அடி பாட்டுக்கு அடி, புண்ணு பாட்டுக்கு புண்ணு, நட பாட்டுக்கு நட. அப்படிப் பழகணும். இப்போ நகரத்துல இருக்குற பொண்டுவோபோல, கடக்கரையில பொண்டுவோ தான் சோலி பார்த்து வாழ முடியாது. கஷ்டமோ நஷ்டமோ, குடும்பத்தோடு சேர்த்துதான் எல்லாம்.
வீட்டுல ஆம்பிளைங்க நடுராத்திரி ரெண்டு மணி இல்ல, மூணு மணி இல்ல, கடலுக்கு ஓடுவாங்க. அந்த நேரத்துல, வலைய எடுத்துக் குடுக்கிறது, வள்ளத்துல போறதுக்குத் தளவாட சாமானுகளை எடுத்துக்குடுக்குறது, ஒரு வா கொடுத்தனுப்ப கஞ்சித் தண்ணியோ, கட்டுச்சோறோ எடுத்துக் குடுக்குறதுனு அப்பமே ஒரு வீடு முழிச்சிக்கிடும். கடலுக்கு ஆம்பளையை அனுப்பிப்புட்டு, பொம்பளை நிம்மதியா தூங்க முடியுமா? விடியிற வரைக்கும் கூரையை வெறிச்சிக்கிட்டு, சாமியை வேண்டிக்கிட்டு கிடப்போம்.
கொஞ்சம் வானம் கரைஞ்சதும் எந்திரிச்சு பிள்ளைங்களுக்குக் கொடுத்து அனுப்ப எதையோ செஞ்சுவெச்சுட்டு, பிள்ளைங்களை எழுப்பிவுட்டு, படிக்கச் சொல்லி டீத்தண்ணி வெச்சுக்கொடுத்து, சோத்தைக் கட்டிக் கொடுத்தோம்னா, வானம் தெளிஞ்சிரும். அவசர அவசரமா, கடக்கரைக்கு மீன் வாங்க ஓடுவோம். ஏலத்துல மீன் எடுத்து, கூடையில கட்டிக்கிட்டோம்னா ஆளுக்கொரு திசையா வாடிக்கை ஊருக்குப் போவோம். சூரியன் உச்சில போற முட்டும் தெருத்தெருவா கூவி நடப்போம். ஒண்ணு ரெண்டு நா எல்லாமும் வித்திரும். பல நா பாதிக்குச் சொச்சம் மிச்சப்படும். தூக்கிக்கிட்டு வீடு வந்தோம்னா, பசி பொரட்டி எடுக்கும். கஞ்சியைக் குடிச்சிட்டு மிச்ச மீனைக் கருவாடாக்க எந்திரிப்போம். அந்த நா மீனை ஊறல்ல போட்டுட்டு, முன்ன நா ஊறலைக் கலைச்சி, மீனைக் காயப்போட எடுத்தோம்னா, முடிக்கையில பள்ளிக்கூடம் போன புள்ளைங்க வீடு திரும்பிடும். ராத்திரி சோத்தை வடிச்சி, பசியாற வெச்சதுக்கு அப்புறம் உட்கார்றோம் பாருங்க... அப்பம்தான் ஒலகம் தெரியும். ஆனா, அப்பவும் மனசு முழுக்க கடல்லேயே அலை அடிச்சிக்கிட்டு கெடக்கும். போன மனுஷம் இப்ப எங்க நிக்குதோ, காத்தும் நீவாடும் எப்படி அடிக்குதோ, மீனு கெடைச்சுதோ, கெடக்கிலியோ, எப்பம் மனுஷம் கர திரும்புமோன்னு அடிக்கிட்டே கெடக்கும். மனுஷம் வர்ற வரையில இதே பாடுதான். கரைக்கு வந்து திரும்ப கடலுக்குப் போற வரைக்குள்ள எடைப்பட்ட நேரம்தான் மனசு கொஞ்சம் நெலையா இருக்கும்.
இதுவே நல்லூழ்
இந்த வாழ்க்கையே நல்ல வாழ்க்கம்போம் கடக்கரையில. ஏன்னா, என்ன கஷ்டம்னாலும் கூட சுமந்துக்க ஒரு நாதி இருக்கு. இன்னும் கட்டினவனைக் கடலுக்குக் கொடுத்துட்டு, அவன் கொடுத்ததைக் கையில சுமந்துக்கிட்டு, அஞ்சுக்கும் பத்துக்கும் மீன் வித்து, கருவாடு சுமந்து, கால் வயிறு, அரை வயிறைக் கழுவுற கொடுமையெல்லாம் இருக்கே... அதெல்லாம் காணச் சகிக்காதய்யா... ஆனா, தெருவுக்கு நாலு பேரு இப்படிச் சிறுவயசிலேயே அறுத்துட்டு, அம்போன்னு சுமந்து நிக்கிற கொடுமை எந்தக் காலத்துலேயும் குறையலீயே...”
அப்படியே ஆத்துப்போகிறார்கள், கண்கள் கலங்கி நிற்கின்றன.
“முடியலைய்யா... எந்த நேரமும் வாய்க்கரிசி வெச்சிக்கிட்டுதான் உட்கார்ந்திருக்கணும்... ஒரு வா சோத்துக்காக. அதாம் பொழப்பு, அதாம் விதி கடக்கர பொண்ணுக்கு!”
(அலைகள் தழுவும்...)
-சமஸ் (தொடர்புக்கு samas@thehindutamil.co.in)

ஒரு நிமிடக் கதை: மருமகள்


ஒரு நிமிடக் கதை: மருமகள்


அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று அண்ணனின் போன் வந்ததும் சங்கர் அப்பாவைப் பார்க்க கிராமத்துக்கு கிளம்பினான்.
ஆபீஸில் இருக்கும் போது போன் வந்ததால், மனைவி சித்ராவிடம் கூட சொல்லாமல் கிராமத்துக்கு சென்றான். அங்கிருந்து மனைவிக்கு போன் செய்து தான் ஊருக்கு வந்திருப்பதைச் சொன்னான்
அடுத்தநாள் மாலை ஊரில் இருந்து கிளம்பி திங்கள்கிழமை நேராக அலுவலகத்துக்கு சென்றான் சங்கர். இரவு வீடு திரும்பியவனுக்கு அதிர்ச்சி. வீட்டில் மனைவி சித்ரா இல்லை. குழந்தைகள் பள்ளியை விட்டு வந்து பள்ளி சீருடையைக் கூட மாற்றாமல் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.
அதைப் பார்த்த சங்கருக்கு எரிச்சலாக வந்தது. வீட்டிலிருந்த வேலைக்காரியிடம் “அவ எங்க போய் தொலைஞ்சா...?” என்று கத்தினான்.
“எனக்கு தெரியாது, சார்!... காலையில யாருக்கோ போன் பண்ணாங்க. உடனே ‘நான் அவசரமா வெளியப் போகணும். நான் வர்றவரைக்கும் பிள்ளைங்களைப் பார்த்துக்கோ’ன்னு மட்டும் சொல்லிட்டுப் போனாங்க!" என்று அவள் சொல்ல உடனே சித்ராவின் ‘செல்’லுக்கு சங்கர் போன் செய்தான்.
சித்ரா போனை எடுத்ததும், “வீட்ல இல்லாம நீ எங்க போய் தொலைஞ்சே...!?” கடுப்புடன் கத்தினான்.
“உங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டதும், உடனே பேருக்குன்னு போய் பார்த்துட்டு அம்போன்னு அந்த கிராமத்துல வசதியில்லாத உங்க அண்ணனை நம்பி விட்டுட்டு வந்திட்டீங்க. அதான் நான் கிளம்பி வந்து சிட்டியில நல்ல ஹாஸ்பிட்டல்ல அவரை சேர்த்திருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன். அதுவரைக்கும் நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. ப்ளீஸ்!” என்றாள்.
இதைக் கேட்டதும் குற்ற உணர்ச்சியில் சங்கர் தலை குனிந்தான்.

எத்திசையும்... : கொடி காட்டிய (ஸ்காட்லாந்து) குமரன்!


எத்திசையும்... : கொடி காட்டிய (ஸ்காட்லாந்து) குமரன்!

ஐக்கிய பிரிட்டன் குடியரசிலிருந்து பிரிந்து தனி நாடாக வேண்டும் என்று ஸ்காட்லாந்து தொடர்ந்து கோரிவருகிறது. தனி நாடு இல்லையென்றாலும், ஸ்காட்லாந்துக்குப் பிரதமர் உண்டு. சமீபத்தில் ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் நடந்த காமன்வெல்த் போட்டியை, அந்நாட்டின் பிரதமர் அலெக்ஸ் அல்மோண்ட் ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின்னால் ஒரு ரசிகர் பிரிட்டன் கொடியைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார். ஒரே வேடிக்கையாக இருந்ததாக பிரிட்டன் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. இதே அலெக்ஸ், கடந்த ஆண்டு விம்பிள்டன் போட்டியை பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ரசித்துக்கொண்டிருந்தபோது, ஸ்காட்லாந்து கொடியைக் காட்டி பரபரப்பூட்டினார். பழிக்குப் பழியா?!
மேயருக்கு வயது ஐந்து
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தின் டோர்செட் நகரத்தில் இரண்டு முறை மேயராக இருந்த ராபர்ட் டஃப்ஸ், இந்த ஆண்டு தேர்தலில் தோற்றுவிட்டார். அவருக்கு 'ர்' போடுவதா 'ன்' போடுவதா என்பது சற்றே குழப்பமான சங்கதி. காரணம், மேயருக்கு வயது ஐந்துதான். 28 பேர் கொண்ட டோர்செட் நகர மேயராக 2012-ல் குலுக்கல் முறையில், முதல்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டஃப்ஸ், கடந்த ஆண்டும் வெற்றிபெற்று பதவியைத் தக்கவைத்துக்கொண்டான். சென்ற வாரம் நடந்த தேர்தலில் 16 வயதான எரிக் முல்லர் என்ற சிறுவன் வென்றான். “விட்டது பணிச்சுமை. இனி நான் சுதந்திரப் பறவை” என்று குதூகலிக்கிறான் குட்டிப் பையன்! எத்தனை இதமான அரசியல்!
அலுவலக அலை!
அலுவலகம் செல்வோரின் மனநிலை எவ்வளவு புத்துணர்வுடன் உள்ளதோ அவ்வளவு சுறுசுறுப்பாக வேலையும் நடக்கும். பணியிடச் சூழல் அத்தனை முக்கியமானது. இதை கவனத்தில் எடுத்துக்கொண்ட ஜப்பான் நிறுவனம் ஒன்று, தனது ஊழியர்களைப் பரவசமூட்ட, அலுவலகத்துக்குள் கடற்கரையையே கொண்டுவந்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. அலுவலகத்தின் வரவேற்பறையின் ஒரு மூலையில், சிறு அளவில் கடல் அலை வந்துவிழுகிறது. அலையின் சத்தம் தங்களை உற்சாகப்படுத்துவதாக ஊழியர்கள் கூறுகின்றனர். முப்பரிமாணத் தொழில்நுட்பத்தின் மூலம் இதை உருவாக்கி அசத்தியிருக்கிறது அந்நிறுவனம். கடற்கரையில், காதலர்களுக்கு அனுமதி உண்டா என்பது தெரியவில்லை.
சவப்பெட்டிக்குள் அரசின் அலட்சியம்!
'வேலையில்லாத் திண்டாட்டம்' என்ற வார்த்தைப் பிரயோகம் உலகெங்கும் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது. உகாண்டா தலைநகர் கம்பாலாவில் 'வேலையில்லாத சகோதரத்துவக் குழு' என்ற பெயரில் இளைஞர்கள் போராடிவருகின்றனர். சமீபத்தில், சவப்பெட்டி ஒன்றைச் சுமந்துவந்து ‘வேலைவாய்ப்பு மரணமடைந்துவிட்டது' என்று போராட்டம் நடத்தினார்கள். அவர்களில் 12 பேரைக் கைதுசெய்திருக்கிறது போலீஸ். உகாண்டா நாடாளுமன்றத்துக்குள் பன்றிக்குட்டிகளை அனுப்பி ரகளை செய்த குழு அது. கவனம் ஈர்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது.

மாநகராட்சி பள்ளி மாணவர்களை ஜெயிக்க வைக்கும் தாசில்தார்


மாநகராட்சி பள்ளி மாணவர்களை ஜெயிக்க வைக்கும் தாசில்தார்

மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாடம் எடுக்கும் மதுரை தாசில்தார் பாலாஜி.‘இவரது சேவை எமக்குத் தேவை’ மதுரை தாசில்தார் பாலாஜியின் பெயரைக் குறிப்பிட்டு சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பலர் இப்படி பாராட்டுக் கடிதம் கொடுத் திருக்கிறார்கள். தாசில்தாரை பாராட்டி பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் இப்படிக் கடிதம் கொடுக்கக் காரணம்தான் என்ன?
மதுரை மாவட்ட வருவாய்த் துறையில் 1989-ல் பணியில் சேர்ந்தவர் பாலாஜி. படிப்படியாக உயர்ந்து தாசில்தாரானார். எம்.எஸ்.சி., பி.எட்., மட்டுமல்லாது 14 டிகிரிகளை வாங்கி இருக் கிறார். வருவாய்த்துறை பணியில் சேர்வதற்கு முன்பாக புதுக் கோட்டை மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக பணி புரிந்தார் பாலாஜி.
மதுரையில் ராஜாஜியால் தொடங்கப்பட்ட சேவாலயத்தில் உள்ள காப்பகத்தில் ஆதரவற்ற மாணவர்கள் 175 பேர் தங்கிப் படிக்கிறார்கள். தொடக்கத்தில் இவர்கள்தான் பாலாஜியின் இலக்கு. மாலை 5 மணிக்கு பணி முடிந்ததும் நேராக சேவா லயம் வந்துவிடும் பாலாஜி, அந்த மாணவர்களுக்கு ஆங்கிலம்,
கணிதம் உள்ளிட்ட பாடங்களையும் ஒழுக்கத்தையும் போதித்தார். இரவு ஏழு மணிக்குப் பிறகு ஒன்பது மணிவரை, அன்னை சத்யா ஆதரவற்றோர் மகளிர் காப்பகத்தில் உள்ள மாணவிகளுக்கு வகுப்பு எடுத்துவிட்டு அதன் பிறகுதான் வீடு திரும்புவார்.
ஒருகட்டத்தில், மதுரை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் வார இறுதி நாட்களில் தாமாகவே போய் வகுப்பு எடுக்க ஆரம்பித்தார் பாலாஜி. அந்த ஆண்டு மதுரை மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் ஏழு சதவீதம் அதிகரித்தது.
ஐந்து பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை எட்டின. 2011-ல் பத்தாம் வகுப்பில் தேற மாட்டார்கள் என்று சொல்லப்பட்ட மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 132 பேர் பாலாஜியிடம் ஒப்படைக் கப்பட்டார்கள். அவர்களுக்கு மட்டும் 20 நாட்கள் சிறப்பு வகுப்புகள் எடுத்து அதில் 76 பேரை தேர்வு பெறவைத்தார் பாலாஜி. பின்னர் நடந்தவைகளை அவரே சொல்கிறார்....
‘‘மதுரையில் ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையர் அலுவலகத் திலும் பணியாற்றியதால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலருக்கு என்னை தெரியும். அவர்கள்தான் என்னைப் பற்றி சென்னை மேயர் சைதை துரைசாமியிடம் சொல்லி இருக்கிறார்கள்.
அதன்பேரில் மேயரின் விருப்பப்படி, 2012-ல் சென்னை மாநகராட்சி உயர் நிலைப் பள்ளிகளுக்கு நான் வந்து வகுப்புகளை எடுக்க ஆரம்பித்ததும் அவை 92 சதவீத தேர்ச்சியை எட்டின. 12 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை எட்டின.
2013-ல் ஸ்டேட் லெவல் ரேங்க் வரவேண்டும் என்று சைதாப்பேட்டையில் ஒரு மையத்தில் 20 நாட்கள் 32 மாணவர்களை தங்க வைத்து கோச்சிங் கொடுத்தேன். அதில் ஒரு மாணவன் 496 மதிப்பெண் எடுத்தான்.
இலக்கை எட்ட சென்னையில் நான்கு இடங்களில் தனியாக பயிற்சி மையங்கள் அமைத்து பாடம் நடத்துகிறேன். நிச்சயம் இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர் ஒருவரையாவது மாநில அளவிலான ரேங்க் எடுக்க வைப்பேன்’’ தன்னம்பிக்கையுடன் சொன்னார் பாலாஜி. (தொடர்புக்கு: 9445190148)

சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதில் என்ன தவறு?


சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதில் என்ன தவறு?

சமஸ்கிருத வாரம் சில பள்ளிக்கூடங்களில் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் எதிர்க்கிறார்கள்.
நம்மூரில் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சிக் கட்டிடங்களைத் தொலைவிலிருந்தே நாம் அடையாளம் காண முடியும். ஏன் தெரியுமா? ‘தமிழ் வாழ்க’ என்ற பலகை. அனேகமாக நியான் விளக்குகளுடன் ஒளிரும். இப்படி விளம்பரப் பலகைகள் வைத்துத் தமிழை வளர்க்க முடியாது என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியும். ஆனால், அவர்கள் நம்புவது மக்களின் உணர்வை, அறிவை அல்ல.
அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்றுவரும் நம் அரசியல்வாதிகள், எந்த நாட்டிலும் ‘ஆங்கிலம் வாழ்க,’ ‘ஸ்பானிஷ் வாழ்க,’ ‘பிரெஞ்ச் வாழ்க’ என்று தகவல் பலகைகள் வைத்து அவரவர் மொழிகளை வளர்க்கவில்லை என்பதையும் மற்றவர்களுடன் பழகி, கடல் கடந்து சென்று அவர்கள் மொழிகளையும் கற்றுக் கொண்டே தம் மொழிகளை வளர்த்தார்கள். இதை உணர்ந்துகொண்டு, தமிழக அரசியல் வாதிகள் வேற்று மொழிகள் பற்றிப் பேசுவது நல்லது. இந்திக்கான எதிர்ப்பே இனி நாட்டின் பல மாநிலங்களில் வலுவாக இருக்க முடியாது என்கிறபோது, சமஸ்கிருத வாரத்தை எங்கோ ஒரு மூலையில் கொண்டாடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நம் அரசியல்வாதிகள் இவ்வளவு வேகப்பட வேண்டாம்.
பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்த மாணவர்கள் பிழையில்லாமல் தமிழ் எழுதுவதில்லை. தொலைக்காட்சித் தமிழின் உச்சரிப்பு நாராசமாக இருக்கிறது. நம் ஆட்சியாளர்களும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகளும் முதலில் தமிழர்கள் தமிழை ஒழுங்காகப் பேசுகிறார்களா, எழுதுகிறார்களா என்பதைப் பார்த்துவிட்டு, இந்தி யையும் சமஸ்கிருதத்தையும் விரட்ட வில், வேல், விறகுக்கட்டைப் படைகளை அனுப்பலாம்.
சமஸ்கிருதம் கற்றுத் தரப்படும் மத்திய அரசின் பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட அரசு முன்வந்திருக்கிறது என்றால், அதைச் செய்ய மத்திய அரசுக்கு உரிமை இருக்கிறது. அதை யாரும் தடுப்பதற்கில்லை. எல்லாப் பள்ளிகளிலும் சமஸ்கிருத வாரத்தைக் கொண்டாடுங்கள் என்று மத்திய அரசு சொல்லவில்லை என்கிறபோது, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இதை ஏன் பெரிய பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டும்?
சமஸ்கிருதம் சிங்கமா, புலியா? இவர்கள் மீது விழுந்து, பிறாண்டிக் கடித்துக் குதறிவிடப் போகிறதா? ஏன் இந்தக் கவலை? சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படும் நாட்களில் தமிழ்மொழி நாடு கடத்தப்படுமா? சமஸ்கிருத வாரம் கொணடாடப்படுவதால் தமிழ் அழிந்துவிடுமா? அந்த நாட்களில் மக்கள் சமஸ்கிருதம்தான் பேச வேண் டும், தமிழ் பேசக் கூடாது என்று கட்டாயமா? அரசியல்வாதிகள் அதற்காக ஏன் இப்படித் துள்ளிக் குதிக்க வேண்டும்?
நாட்டில் அம்மா தினம், அப்பா தினம், பெண்டாட்டி தினம் என்று பல தினங்கள் கொண்டாடப்படுகின்றனவே. அவை இந்த மண்ணின் புழக்கத்தில் உள்ள தினங்களா? காதலர் தினம் என்பது இந்த மண்ணோடு பிறந்ததா? காதலர்கள் தினம், வேலன்டைன் தினம் என்று கொண்டாடுகிறார்களே, வேலன்டைன் என்ன சங்க காலப் புலவரா? அதற்கு எதிர்ப்புக் காட்டாத அரசியல்வாதிகள், சமஸ்கிருதத்தை இப்படி எதிர்க்கிறார்களே. இந்த நாட்டின் மாபெரும் தத்துவ நூல்கள் சமஸ்கிருதத்தில்தான் எழுதப்பட்டன என்பதைப் புரிந்துகொள்ளும் அளவுக்குத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இந்தியர்கள் ஆவது எப்போது?
- ஆர். நடராஜன், மூத்த பத்திரிகையாளர். தொடர்புக்கு: hindunatarajan@hotmail.com
Tuesday, 5 August 2014

அக்கம் பக்கம்: மூச்சடைத்த சுந்தரவனக் காடுகள்!


அக்கம் பக்கம்: மூச்சடைத்த சுந்தரவனக் காடுகள்!

சுற்றுச்சூழல் மாசடைவதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை மனிதர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. மேற்கு வங்க மாநிலத்தின் சுந்தரவனக் காடுகளுக்கு நேர்ந்திருக்கும் அபாயம் அதைத்தான் உணர்த்துகிறது. சுந்தரவனக் காடுகள், இயற்கையாக அமைந்த கடலோர அலையாத்திக் காட்டுப் பகுதியாகும்.
அங்குள்ள மரங்களுக்குக் காற்றில் உள்ள கரியுமில வாயுவை (கார்பன்-டை-ஆக்சைடு) உறிஞ்சி, ஆக்ஸிஜனை வெளியிடும் ஆற்றல் குறைந்துவருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள ஆற்று நீரில் உப்புத்தன்மை அதிகரிப்பதுதான் இதற்குக் காரணம் என்று ஆய்வுக்குழு கண்டுபிடித்துள்ளது. மனிதர்களின் பேராசையும், சுற்றுச்சூழல் மீது அக்கறையின்மையும் இந்த பாதிப்பின் முக்கியக் காரணிகள்.
மத்திய அரசின் நிதியுதவி பெற்று, கடலியல் விஞ்ஞானி அபிஜித் மித்ரா தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில்தான் சுந்தரவனக் காடுகள் சந்திக்கும் புதிய அபாயம்பற்றி தெரியவந்துள்ளது. மூன்று ஆண்டுகளாகத் தயாரான அந்த ஆய்வின் அறிக்கை கடந்த ஆண்டுதான் அரசிடம் தரப்பட்டது.
அலையாத்திக் காடுகள், சதுப்புநிலக் கோரைகள், கடலில் மிதக்கும் தாவரங்கள், சங்கு போன்ற கடல்வாழ் உயிரினங்கள் ஆகியவை கரியமில வாயுவைக் கிரகிக்கும் ஆற்றல்பெற்றவை. அவை, தங்களிடம் சேமித்துவைக்கும் கரியுமில வாயுவுக்கு ‘நீலக் கரியுமில வாயு' என்று பெயர். காற்றிலிருந்து கரியமில வாயு உள்ளிழுக்கப்படுவதால் புவிவெப்பம் தணிகிறது.
சுந்தரவனக் காடுகள் பகுதி கிழக்கு, மேற்கு, மத்திய பகுதி என்று மூன்றாகப் பிரித்து ஆராயப்பட்டது. மத்திய சுந்தரவனக் காட்டுப் பகுதியில் உள்ள பைன் மரங்கள் காற்றில் உள்ள கரியுமில வாயுவை மிகக் குறைவாகத்தான் உள்ளிழுக்கின்றன. காரணம், அவை இருக்கும் பகுதியில் ஆற்றுநீரில் உப்பு அதிகமாக இருக்கிறது. அதற்குக் காரணம், சுந்தரவனக் காட்டில் ஏராளமான முதிர்ந்த பெருமரங்கள் வெட்டப்படுவதும் செங்கல் தயாரிப்புக்காக ஏராளமானோர் பெரிய பெரிய சூளைகளை அமைத்திருப்பதும்தான். சுந்தரவனத்தில் பைன் வகை மரங்களுடன் கியோரா, ஜென்வா வகை மரங்களும்கூட வளர்கின்றன. மாட்லா ஆற்றுக்கு அருகில் ஒரு ஹெக்டேர் பரப்பில் வளர்ந்த மரங்கள் 22 டன் கரியுமில வாயுவைத்தான் உள்ளிழுக்கின்றன.
அலையாத்திக் காடுகள் சுத்தமான மழைநீரில் நன்கு வளரும். இப்போது சுந்தரவனக் காடுகள் பகுதியில் நல்ல நீர் இருப்பு குறைந்துவிட்டதால், மரங்களின் உயரமும் செழிப்பும் குறைந்துவிட்டன. இதனாலேயே கரியுமில வாயுவை உறிஞ்சும் திறனும் குறைந்துவிட்டது. சுந்தரவனக் காடுகளை யுனெஸ்கோ அமைப்பு உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்திருக்கிறது. மாட்லா ஆற்றுத் தண்ணீரில் உப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. மாட்லா ஆறும் வித்யாதாரி ஆறும் சங்கமிக்கும் இடத்தில் படிந்த வண்டல் அகற்றப்படாமல் ஆண்டுக் கணக்கில் சேர்ந்துவிட்டதால், தூர் அதிகமாகிவிட்டது. இதனால் சுத்த நீரின் அளவும் குறைந்துவிட்டது.
போதாக்குறைக்கு இந்தப் பகுதியில் இறால் வளர்ப்பும் அதிகரித்துவிட்டது. ஆற்றில் படியும் வண்டலும் கசடும் உரிய காலத்தில் அகற்றப்படாவிட்டால் சுந்தரவனமே பாழாகிவிடும் என்று அறிக்கை எச்சரிக்கிறது.
இந்த நிலையை மாற்ற சுந்தரவனக் காடுகள் பகுதியில் உள்ள செங்கல் சூளைகளை வேறிடங்களுக்கு இடம் மாற்ற வேண்டும். காட்டில் மேலும் அதிக எண்ணிக்கையில் மரங்களை நட வேண்டும். ஆற்றில் படிந்த வண்டலைப் போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும். இறால் மீன் பண்ணைகளை உடனடியாக மூட வேண்டும். புலிகளின் காப்பகமாகவும் திகழும் சுந்தரவனக் காட்டில் வெளியாட்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல்கொடுத்துவருகின்றனர். அரசு நிர்வாகம்தான் செவிசாய்க்க வேண்டும்.
‘தி இந்து’ (ஆங்கிலம்)

ஆடிப் பெருக்கும்... ஆயிரம் கிலோ துணியும்...: சிலருக்குத் தொழில், பலருக்கு குறைந்த விலையில் உடைகள்


ஆடிப் பெருக்கும்... ஆயிரம் கிலோ துணியும்...: சிலருக்குத் தொழில், பலருக்கு குறைந்த விலையில் உடைகள்

வேட்டி, சேலைகளை மணலிலும், காற்றிலும் உலர வைக்கின்றனர் | படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்ஆடி அமாவாசை, ஆடிப் பெருக்கு நாட்களில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரிக்கரைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இதுபோல் நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கில் வரும் பொதுமக்கள் மூதாதையர்களுக்கு இங்கு தர்ப்பணம் கொடுக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் காவிரியில் நீராடிய பின் தாங்கள் அணிந்திருக்கும் பழைய ஆடைகளை கழற்றி ஆற்றில் விட்டு விடுகின்றனர்.
“ஈரத் துணியை வீட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாதாம். செய்த பாவங்கள் ஆற்றோடு போய் விடுமாம்” என்று கூறிவிட்டு காவிரியை விட்டு அகலும் பொதுமக்கள், நதி மாசுபடுவதைப் பற்றி கவலைப்படுவது இல்லை. இதனால் அம்மா மண்டபம் காவிரிக்கரையில் மட்டும் தினமும் 100 கிலோ வரை பழைய துணிகள் குவிகிறது. இதுவே அமாவாசை, ஆடிப் பெருக்கு நாட்களில் ஆயிரம் கிலோவாக அதிகரித்து விடுகிறது.
இப்படி குவியும் பழைய துணிகளை சேகரித்து எடைக்கு போடுவதை தொழிலாக சிலர் செய்து வருகின்றனர்.
இந்தாண்டு ஆடிப்பெருக்கில் கிடைத்த பழைய துணிகளை உலர வைத்துக் கொண்டிருந்த கதிரேசனிடம் கேட்டபோது, “பொதுமக்கள் ஆற்றில் விட்ட துணிகளை காலை முதல் இரவு வரை சேகரித்துள்ளோம். எப்படியும் ஆயிரம் கிலோ தேறும். வெயிலில் நன்கு காய வைத்த பின்னர் 50 கிலோ கொண்ட மூட்டைகளாகக் கட்டி, பழைய துணிகளை வாங்கி விற்கும் வியாபாரிகளிடம் எடைக்கு விற்று விடுவோம்.
ஒரு கிலோ ரூ.5 என்ற விலைக்கு எங்களிடம் துணிகளை வாங்கும் வியாபாரிகள் நல்ல வேட்டி, சேலைகளை அப்படியே சலவைக்குப் போட்டு புதிய துணி மாதிரி தயார் செய்துவிடுவர். இப்படி தயார் செய்யப்படும் துணிகள் பெரும்பாலும், ஏழை எளிய மக்கள் கூடும் இடங்கள், பிழைப்புக்காக வடமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் வாழும் பகுதியில் கிடைத்த விலைக்கு விற்றுவிடுகின்றனர்.
கிழிந்த துணிகளை சேகரிக்க மாட்டோம். அதையெல்லாம் ஆற்றின் கரையில் ஒதுக்கி வைத்துவிடுவோம். அவற்றை மாநகராட்சியினர் குப்பையுடன் சேர்ந்து அள்ளிச் சென்று விடுவர்” என்றார்.
பழைய துணி சேகரிப்பதைத் தொழிலாகச் செய்யும் இவரைப் போன்றோரின் செயல் ஒரு வகையில் காவிரியை சுத்தம் செய்யும் பணி என்றே கூறலாம்.

732 வயதான பெண்மணிக்கு சைக்கிளும், 532 வயதான பெண்மணிக்கு தையல் இயந்திரமும் கொடுத்து 'அசத்திய' சத்தீஸ்கர் அரசு


732 வயதான பெண்மணிக்கு சைக்கிளும், 532 வயதான பெண்மணிக்கு தையல் இயந்திரமும் கொடுத்து 'அசத்திய' சத்தீஸ்கர் அரசு

(கோப்புப் படம்)நியூயார்க் டைம்ஸின் தகவலின்படியும், இந்த உலகத்தில் இதுவரையிலான கணக்கெடுப்பின்படியும், உலகிலேயே மிக வயதான பெண்மணி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜென்னி கால்மென்ட். இவர் தனது 122-வது வயதில் 1997-ஆம் ஆண்டு காலமானார். அதே சமயத்தில், ஈக்வேடர் டைம்ஸின் தகவலின்படி, உலகில் உயிருடன் இருக்கும் மிக வயதான பெண்மணி ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மிசோ ஒகாவா. இவர் இந்த ஆண்டு மார்ச் 16-ஆம் தேதி தனது 116-வது பிறந்ததாளைக் கொண்டாடியிருக்கிறார்.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சமூக ஆர்வலர் சஞ்சய் அகர்வால் என்பவருக்கு, சத்தீஸ்கரின் தொழிலாளர் நலத் துறை அளித்திருக்கும் தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் நம்மை ஆழ்ந்துவிடும்.
அத்துறையினர் அளித்துள்ள சில 'அதிசயக்க' வைக்கும் தகவல்கள் இவைதான் : கடந்த ஆண்டு, அந்த மாநிலத்தின் சைக்கிள் விநியோக திட்டத்தின்படி, ராய்பூரில் வசிக்கும் பூஷ்பா சஹு என்பவருக்கு 732 வயது என்றும், அவர்தான் உலகிலேயே மிகவும் வயதான பெண்மணி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு இத்திட்டத்தின்படி, சைக்கிள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்திட்டம் குறித்து சஞ்சய் அகர்வாலுக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ராய்பூர் மாவட்டத்தில், 100 முதல் 732 வரையிலான வயதுடைய 7000 பெண்மணிகள், அம்மாநில அரசின் பெண்கள் நலத் திட்டத்தின் மூலம் பயனடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு, வகைப்படுத்தப்படாத துறையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக சத்தீஸ்கர் மாநில அரசு, முதலமைச்சர் தையல் இயந்திரத் திட்டத்தையும் (Mukhyamantri Silai (sewing) Machine Yojana), முதலமைச்சர் சைக்கிள் உதவி திட்டத்தையும் (Mukhyamantri Cycle Sahayata Yojana) அறிமுகப்படுத்தியது. இதன்மூலம், அங்குள்ள பெண் தொழிலாளர்களுக்குச் சைக்கிளும், தையல் இயந்திரமும் வழங்கத் தொடங்கியது.
சத்தீஸ்கர் தொழிலாளர் நலத் துறையின் தகவலின்படி, 532 வயதான பெண்மணி உஷா ஜம்காடே உட்பட்ட 100 வயதுக்கு மேலான 6231 பேருக்கு தையல் இயந்திரமும், 1368 பேருக்கு சைக்கிளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த 'அசாதாரணமான சம்பவம்' குறித்து ராய்பூரின் தொழிலாளர் ஆணையர் ஜிதின் குமார் கூறுகையில், "இது மென்பொருளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடந்தது. நாங்கள் தரவு பதிவு சேவைகளை வெளியில் கொடுத்துச் செய்கிறோம். இதனால், ஒருவருக்கு மட்டும் இதுபோன்ற தவறான தகவல் சென்றிருக்க வாய்ப்புள்ளது", என்று தெரிவிக்கிறார்.
ஆயினும், இதுகுறித்து சத்தீஸ்கர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சைலேஷ் நிதின் த்ரிவேதி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது. ​