பன்னாட்டு நிறுவனங்கள்தான் வளர்ச்சிக்கு அடிப்படையா?



வங்கி வட்டிவீதங்கள் இப்போது அதிகம் என்றாலும், இன்னும் சில மாதங்களுக்கு இப்படித்தான் தொடரும் என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கையிலிருந்து தெரிகிறது.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நிதிக்கொள்கையை மறுபரிசீலனை செய்யும் ரிசர்வ் வங்கி, 2014-15-ம் ஆண்டுக்கென மூன்றாவது முறையாகப் பரிசீலித்த பிறகு, வட்டிவீதத்தைக் குறைக்க வேண்டாம் என்று முடிவுசெய்திருக்கிறது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் குறுகிய காலக் கடனுக்கான வட்டியையும் (ரெபோ ரேட்), ரொக்கக் கையிருப்பு வீதத்தையும் மாற்றப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளது. அதே சமயம், வங்கிகள் சட்டபூர்வமாக வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு (எஸ்.எல்.ஆர்.) 0.5% குறைக்கப்பட்டிருக்கிறது.
நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு ஏற்பட்டதும், பொருளாதாரத் துறையில் மீட்சி ஏற்படும், வளர்ச்சிக்குத் தடையாக உள்ள அம்சங்கள் படிப்படியாக விலக்கப்படும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. நான்கு மாதங்களுக்கு முன்னால் பொதுத் தேர்தல் சமயத்தில் ரிசர்வ் வங்கி எச்சரிக்கையாக இருந்தது நியாயமே. இப்போது ஏன் தயங்க வேண்டும்? ஜேட்லியின் நிதிநிலை அறிக்கை, முந்தைய அரசின் அடியொற்றியே இருந்தது. தொழில், வர்த்தகத் துறையினர் அச்சப்படும் எந்த அம்சமும் அதில் இல்லை. அதையே தூண்டுகோலாகக் கொண்டு ரிசர்வ் வங்கியும் துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க இதுவே உற்ற தருணம்.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் முந்தைய அரசால் நியமிக்கப்பட்டவர் என்றாலும் அவருடைய அனுபவம், திறமை, தகுதி காரணமாக அவரையே தொடர்ந்து நீடிக்க அனுமதித்துள்ளனர். அத்துடன் இன்றைய பொருளாதார நிலைமையில், முந்தைய அரசின் கொள்கைகளிலிருந்தும் பாதையிலிருந்தும் உடனே விலகிச் செல்வது அவசியமில்லை என்று புதிய அரசு கருதுவதையே இந்தக் கொள்கை முடிவுகள் தெரிவிக்கின்றன.
வங்கிகளுக்குத் தரும் கடன்கள் மீதான ரெபோ வட்டி வீதத்தைவிட, உண்மையான பொருளாதாரக் காரணிகளையே கணித்து அடுத்த நடவடிக்கைகளை எடுக்க விரும்புவதாக ரகுராம் ராஜன் கூறியிருப்பது வரவேற்கத் தக்கது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் 5.5% ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது. மத்திய அரசின் நிதிக் கொள்கையும் பொருளாதாரக் கொள்கையும் வளர்ச்சியைச் சார்ந்ததாகவே இருந்தாலும், வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் அம்சங்கள் இன்னும் முழுதாக நீக்கப்படவில்லை. அதில் கவனம் செலுத்தினால் இந்த நிதியாண்டைச் சிக்கலின்றி கடந்துவிடலாம்.
பொருளாதார வளர்ச்சிக்காகத் தனியார் துறைக்கு மேலும்மேலும் சலுகைகள் அளிப்பதால் அதிக அளவில் பலன்கள் கிட்டிவிடாது. அதைவிட, பொதுத்துறை நிறுவனங்கள் மீது அரசு அதிகக் கவனம் செலுத்தினாலே பெரும் முன்னேற்றம் ஏற்படும். கூடவே, சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு ஊக்குவிப்பை ஏற்படுத்தலாம். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் தனிக்கவனம் செலுத்தி முதலீட்டைப் பெருக்கினால், வேலைவாய்ப்பும் வளர்ச்சியும் குறுகிய காலத்திலேயே பெருகிவிடும் என்பதையும், வளர்ச்சிக்காகப் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களை மட்டும் சார்ந்திருப்பது பொருளாதாரத்தைப் படுகுழியில் தள்ளிவிடும் என்பதையும் அரசு நினைவில் கொண்டாலே போதும்.

{ 0 comments... read them below or add one }

Post a Comment