எத்திசையும்... : கொடி காட்டிய (ஸ்காட்லாந்து) குமரன்!
ஐக்கிய பிரிட்டன் குடியரசிலிருந்து பிரிந்து தனி நாடாக வேண்டும் என்று ஸ்காட்லாந்து தொடர்ந்து கோரிவருகிறது. தனி நாடு இல்லையென்றாலும், ஸ்காட்லாந்துக்குப் பிரதமர் உண்டு. சமீபத்தில் ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் நடந்த காமன்வெல்த் போட்டியை, அந்நாட்டின் பிரதமர் அலெக்ஸ் அல்மோண்ட் ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின்னால் ஒரு ரசிகர் பிரிட்டன் கொடியைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார். ஒரே வேடிக்கையாக இருந்ததாக பிரிட்டன் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. இதே அலெக்ஸ், கடந்த ஆண்டு விம்பிள்டன் போட்டியை பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ரசித்துக்கொண்டிருந்தபோது, ஸ்காட்லாந்து கொடியைக் காட்டி பரபரப்பூட்டினார். பழிக்குப் பழியா?!
மேயருக்கு வயது ஐந்து
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தின் டோர்செட் நகரத்தில் இரண்டு முறை மேயராக இருந்த ராபர்ட் டஃப்ஸ், இந்த ஆண்டு தேர்தலில் தோற்றுவிட்டார். அவருக்கு 'ர்' போடுவதா 'ன்' போடுவதா என்பது சற்றே குழப்பமான சங்கதி. காரணம், மேயருக்கு வயது ஐந்துதான். 28 பேர் கொண்ட டோர்செட் நகர மேயராக 2012-ல் குலுக்கல் முறையில், முதல்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டஃப்ஸ், கடந்த ஆண்டும் வெற்றிபெற்று பதவியைத் தக்கவைத்துக்கொண்டான். சென்ற வாரம் நடந்த தேர்தலில் 16 வயதான எரிக் முல்லர் என்ற சிறுவன் வென்றான். “விட்டது பணிச்சுமை. இனி நான் சுதந்திரப் பறவை” என்று குதூகலிக்கிறான் குட்டிப் பையன்! எத்தனை இதமான அரசியல்!
அலுவலக அலை!
அலுவலகம் செல்வோரின் மனநிலை எவ்வளவு புத்துணர்வுடன் உள்ளதோ அவ்வளவு சுறுசுறுப்பாக வேலையும் நடக்கும். பணியிடச் சூழல் அத்தனை முக்கியமானது. இதை கவனத்தில் எடுத்துக்கொண்ட ஜப்பான் நிறுவனம் ஒன்று, தனது ஊழியர்களைப் பரவசமூட்ட, அலுவலகத்துக்குள் கடற்கரையையே கொண்டுவந்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. அலுவலகத்தின் வரவேற்பறையின் ஒரு மூலையில், சிறு அளவில் கடல் அலை வந்துவிழுகிறது. அலையின் சத்தம் தங்களை உற்சாகப்படுத்துவதாக ஊழியர்கள் கூறுகின்றனர். முப்பரிமாணத் தொழில்நுட்பத்தின் மூலம் இதை உருவாக்கி அசத்தியிருக்கிறது அந்நிறுவனம். கடற்கரையில், காதலர்களுக்கு அனுமதி உண்டா என்பது தெரியவில்லை.
சவப்பெட்டிக்குள் அரசின் அலட்சியம்!
'வேலையில்லாத் திண்டாட்டம்' என்ற வார்த்தைப் பிரயோகம் உலகெங்கும் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது. உகாண்டா தலைநகர் கம்பாலாவில் 'வேலையில்லாத சகோதரத்துவக் குழு' என்ற பெயரில் இளைஞர்கள் போராடிவருகின்றனர். சமீபத்தில், சவப்பெட்டி ஒன்றைச் சுமந்துவந்து ‘வேலைவாய்ப்பு மரணமடைந்துவிட்டது' என்று போராட்டம் நடத்தினார்கள். அவர்களில் 12 பேரைக் கைதுசெய்திருக்கிறது போலீஸ். உகாண்டா நாடாளுமன்றத்துக்குள் பன்றிக்குட்டிகளை அனுப்பி ரகளை செய்த குழு அது. கவனம் ஈர்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது.