வாலி எப்படி எழுதினார்?

கடலோடிகள் சமூகத்தில் கவிஞர் வாலிக்குத் தனி மரியாதை உண்டு. ‘தரை மேல் பிறக்கவைத்தான்...’ பாடல் பெற்றுத்தந்த மரியாதை அது. பெரியவர் அஞ்சாப்புலியுடன் பேசிக்கொண்டிருந்தபோது இந்தப் பாடல்பற்றிப் பேச்சு வந்தது. “வாலீ மீன் சாப்புட மாட்டாரு. கடல் பக்கம் வந்தாரான்னுகூடத் தெரியலை. அது எப்புடி அந்த மனுசனுக்கு இந்த உண்மைங்க தெரிஞ்சுதுன்னு ரொம்ப வருசம் எனக்கு மலச்சுப்போவுது. பெறகு ஒருநா புடிச்சுட்டேன். அந்தப் பாட்டுல உள்ள ஒரு வரி எனக்குச் சொல்லிடுச்சு. அது எதுனு நீங்க சொல்லுங்க... பாப்பம்” என்றார்.
நான் வரிசையாக நான்கைந்து வரிகளைச் சொல்ல... மறுத்தவர், கடைசியில் அவரே பாடிக்காட்டினார்:
“ ‘கடல்நீர் நடுவே பயணம் போனால், குடிநீர் தருவது யாரோ... தனியாய் வந்தவர் துணிவைத் தவிர, துணையாய் வருவது யாரோ...'
இந்த வரித்தாம் அது.
ஒரு கடலோடியோட ஒலகம் தெரியணும்னா கடலுக்குள்ள போகணும், மீனு திங்கணும்கிறதெல்லாம் இல்ல. கடலுக்குள்ள போற ஒரு மனுசன் நம்மள மாதிரி தேவைங்களுக்கு என்ன பண்ணுவான்னு யோசிச்சாலே போறும். அவன் ஒலகம் புலப்பட ஆரம்பிச்சுரும். புலவருங்களுக்கு அந்த ஒலகம் அவம் ஞானக்கண்ணுலயே தெரிஞ்சுடுது, சரிதானா கேட்டியளா...” என்றார்.
உண்மைதான். சக மனிதர்களின் உலகத்தை அறிந்துகொள்ள, அவர்களுடைய பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள பல சமயங் களில், நம்மை அவர்கள் இடத்தில் பொருத்தி, சின்னச் சின்ன கேள்விகளைக் கேட்டுக்கொண்டாலே போதுமானதாக இருக்கிறது; பல உலகங்களின் கதவுகள் திறந்துவிடுகின்றன.
சகலமும் கடலுக்குள்தான்!
என்னுடைய எழுத்தாள நண்பர் ஒருவர் ‘நீர்… நிலம்… வனம்' தொடர்பாக ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் ஒரு கேள்வியை அவர் எழுப்பியிருந்தார்: “கடலோடிகளின் ராத்தங்கல்பற்றி எழுதியிருந்தீர்களே... இரவு நேரத்தில் சிறுநீர் வந்தால் எங்கே போவார்கள்? கடலிலேயே போக வேண்டியதுதானா? கடலை மாதா என்று வேறு சொல்வார்களே?”
இன்னொரு வாசக நண்பர் அனுப்பியிருந்த மின்னஞ்சலில், “அதிகாலையில் சென்று மாலைக்குள் திரும்பிவிடுவார்கள் என்று நினைத்திருந்தேன். இரவில் கடலில் தங்கவெல்லாம் செய்வார்களா, சமயத்தில் ஓரிரு நாட்கள் ஆகிவிட்டால் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள்?” என்று கேட்டிருந்தார்.
அக்கறையில் எழும் கேள்விகள் இவை.
கடலோடிகள் கடலுக்குச் செல்வதற்கு நேரம் காலம் எல்லாம் கிடையாது. கடல் சூழல் நன்றாக இருந்தால், அவரவர் தொழில் தேவைக்கேற்பக் கடலுக்குள் இறங்கிவிடுவார்கள். அதிகாலை 2 மணிக்குப் புறப்பட்டு, காலை 8 மணிக்குள் மீன்களோடு கரைக்குத் திரும்பிவிடும் கடலோடிகளும் உண்டு. மீன் கிடைக்காமல் இரண்டு மாதங்கள் வரை காத்திருந்து பிடித்து வருபவர்களும் உண்டு. தமிழகத்தைப் பொறுத்த அளவில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்பவர்கள் கரைக்குத் திரும்பும் சராசரிக் காலம் ஒன்றரை மாதம்.
கடலுக்குப் போய்விட்டால், உச்சா மட்டும் இல்லை; கக்காவும் கடலுக்குள்தான். கடலோடிகளுக்குக் கடல் அம்மாதான். அம்மா மடியில் நாம் அடிக்காத முச்சாவா, கக்காவா? தவிர, கடல் எனும் பிரம்மாண்டத்தின் முன் இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.
ஒரு அடிப்படைப் புரிதலுக்காக இன்றைய தமிழக மீன்பிடிப்பில் உள்ள வகைகள், அவர்களுடைய கடல் பயணங்கள் எப்படி இருக்கும் என்பதுபற்றிய குறிப்புகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.
கரைவலைக்காரர்கள்
கரையையொட்டி நடக்கும் மீன்பிடியில் பங்கேற்பவர்கள் கரைவலைக்காரர்கள். கட்டுமரம் அல்லது வள்ளம் உதவியுடன், கரையிலிருந்து ஓரிரு மைல் தொலைவுக்குச் சென்று வலை விரித்துத் திரும்பிவிட்டு, கரையிலிருந்து வலையை இழுக்கும் இந்த மீன்பிடி முறைக்கு உள்ள பெரிய முக்கியத்துவம் பெண்கள் பங்கேற்கும் ஒரே மீன்பிடி முறை இது. பொதுவாக, நள்ளிரவு 2 மணிவாக்கில் தொடங்கி நண்பகல் 12 மணி வரை நீடிக்கும் மீன்பிடி இது. கரையில் மீன்கள் தென்படும் குறி தெரிந்தால் எந்நேரமாக இருந்தாலும் ஓடுவார்கள். வீடு திரும்பினால்தான் உணவு.
கட்டுமரக்காரர்கள், வள்ளத்துக்காரர்கள்
கட்டுமரங்களிலும் வள்ளங்களிலும் செல்பவர்கள் பெரும் பாலானோர் இப்போது கரைக்கடலிலேயே தொழில் நடத்துகிறார்கள். அதாவது, கரையிலிருந்து 6 கடல் மைல் தொலைவுக்குள். விடிவதற்குள் கடலுக்குள் சென்றுவிடும் இவர்கள், பெரும்பாலும் மாலைக்குள் திரும்பிவிடுவார்கள். பெரும்பாலும் பட்டினி சவாரி. ஒரு பாட்டில் தண்ணீர், வெற்றிலைப்பாக்கு தாண்டி அதிகபட்சம் ஒரு வாளி பழைய கஞ்சி கூடப் பயணிக்கும்.
இயந்திரப் படகுக்காரர்கள்
வள்ளங்களில் மோட்டார் பொருத்திச் செல்பவர்கள். பெரும் பாலும், இவர்கள் கரைக்கடல் முதல் அண்மைக்கடல் வரை தொழில் செய்கிறார்கள். அதாவது, 6 கடல் மைல் முதல் 12 கடல் மைல் வரை. இந்தப் படகுகளில் தண்ணீர், கட்டுச்சாதம் முதல் ரொட்டித்துண்டுகள் வரை செல்லும். ஆழ்கடலுக்கு, அதாவது 12 கடல் மைல்களுக்கு மேல், குறுகிய காலத் தங்கலுக்குச் செல்பவர்களும் உண்டு. இப்படித் தங்கலுக்குச் செல்பவர்கள் தங்கும் நாட்களுக்கு ஏற்ப டீத்தூள், பால் மாவு, ரொட்டித்துண்டுகள் முதல் காய்கறிகள், மளிகைச் சாமான்கள் வரை கூடச் செல்லும். கடலிலேயே சமைத்துச் சாப்பிட்டுத் தொழிலைத் தொடர்வார்கள்.
விசைப்படகுக்காரர்கள்
விசைப்படகுகள் சின்ன அளவிலான வீடுகள். அதிகாலையில் சென்று இரவு திரும்புபவர்களும் சரி, மாதம் கடந்து திரும்புபவர்களும் சரி... சமையல், சாப்பாட்டுக்குத் தயார் நிலையிலேயே செல்வார்கள்.
{ 0 comments... read them below or add one }
Post a Comment