தெலங்கானா இந்தியாவைச் சேர்ந்ததுதானே?


தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டின் எல்லா மூலைகளிலிருந்தும் தங்கள் மாநிலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று தெலங்கானா அரசு எடுக்கும் மகா கணக்கெடுப்பின்போது, தங்களுடைய வசிப்பிடத்தில் இல்லா விட்டால் தெலங்கானாவில் தங்களுக்குரிய உரிமைகளும் சலுகைகளும் பறிபோய்விடுமோ என்ற அச்சமும் பீதியும்தான் இதற்குக் காரணம்.
மாநில அரசு வழங்கும் இலவசங்களையும் மானிய உதவிகளையும் தகுதியற்ற பலர் அனுபவித்துவருவதாலும், போலி குடும்ப அட்டை உலவுவதாலும் புதிய கணக்கெடுப்பு எடுப்பதென்று முடிவு செய்திருப்பதாக மாநில அரசு கூறுகிறது. மாநிலத்தில் 84 லட்சம் குடும்பங்கள் இருப்பதாகவும் நான்கு லட்சம் கணக்கெடுப்பாளர்கள் மூலம் அவர்களை ஒரே நாளில் கணக்கெடுத்துவிடப்போவதாகவும் அந்த அரசு அறிவித்துள்ளது. குடும்ப அட்டை, பாஸ்போர்ட், மின்சார இணைப்பு, கல்வி மானிய உதவிகள், இருப்பிடச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் போன்றவற்றுக்காக இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுவதால், வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்றவர்கள்கூடத் தங்களுடைய வேலைகளையெல்லாம் அப்படியே அரைகுறையாக விட்டுவிட்டு, விழுந்தடித்துக்கொண்டு ஊர் திரும்புகின்றனர்.
மாநிலத்தில் இன்று பெட்ரோல் நிலையங்கள், மருந்துக் கடைகள், இதர வர்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள் மூடியிருக்கும். டாக்சி, ஆட்டோ போன்றவை ஓடாது. அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள், தனியார் பேருந்துகள்கூட அரசின் கட்டுப்பாட்டில் அவசியப்பட்டால் மட்டுமே ஓடும் என்று தெரிகிறது.
மூன்றாம் உலகப் போருக்குத் தயாராகும் நாட்டைப் போல தெலங்கானா அரசு இத்தகைய கெடுபிடிகளையும் ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறது. தெலங்கானா பகுதியில் வசிக்கும் ஆந்திர மாநிலத்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தெலங்கானா அரசின் எந்த உதவியும் கிடைக்காமல் தடுப்பதற்காகத்தான் இந்தக் கணக்கெடுப்பு என்று ஆந்திரர்கள் உள்ளூர அஞ்சுகின்றனர்.
“சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரம் பிரிந்தபோதுகூட, தெலுங்கர்கள் எந்த வித மன உளைச்சலும் பாதிப்பும் இழப்பும் இல்லாமல் விரும்பிய ஊர்களில் அப்படியே தொடர்ந்து வசித்தனர். தெலங்கானா முதல்வரின் நடவடிக்கைகள் ஜென்ம விரோதிகளைக் கணக்கெடுப்பதைப் போலத் தெரிகிறது” என்று தெலுங்கு சம்மேளனத் தலைவர் ஒருவர் கூறியிருப்பது கவனிக்கத் தக்கது. சத்தீஸ்கர், உத்தராகண்ட், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் பிற மாநிலங்களி லிருந்து பிரிந்தபோதும் இப்படி நடந்ததில்லை.
பிற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் வேலைக்காகச் சென்ற உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு தெலங்கானா அரசின் இந்த அதிரடி முடிவு ஏற்படுத்தியிருக்கும் வேதனை சொல்லி மாளாது. படிப்பறிவற்ற அவர்களுக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தரப்போகும் இழப்பீடு அல்லது மாற்று வேலை என்ன?
போலி குடும்ப அட்டைகள் இல்லாத மாநிலங்களே இல்லை. ஒரே நாள் கணக்கெடுப்பில் இது போன்ற பிரச்சினைகள் தீராது. கோடிக் கணக்கில் வரி ஏய்க்கும் பணக்காரர்களையும், கனிமங்களைக் கொள்ளையடிக்கும் சுரங்க முதலாளிகளையும், வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு ஏப்பம்விடும் தொழிலதிபர்களையும் கணக்கெடுத்து, அவர்களிடமிருந்து பணத்தை மீட்க வேண்டியதுதான் சந்திசேகர் ராவ் உடனடியாகச் செய்ய வேண்டிய விஷயம். அதை விடுத்து, இப்படியொரு அதிரடிக் கணக்கெடுப்பை மேற்கொள்வதால், இந்தியாவுக்குள்ளே இன்னொரு நாடாக தெலங்கானா செயல்படக் கூடிய அபாயம்தான் ஏற்படும்.

{ 0 comments... read them below or add one }

Post a Comment